தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்கு அனுமதி : சுகாதாரத்துறை இணைச் செயலர்
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அனுமதி அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
216 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லையென்றும், கடந்த 28 நாட்களில் 42 மாவட்டங்களில் புதிதாக யாருக்குப் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 1,273 கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29.36% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் கொரோனா பிளாஸ்மாக சிகிச்சை முயற்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாம் கொரோனா வைரசோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் கூறியுள்ளார்.