அமெரிக்காவுக்கு சென்ற கப்பலில் இருந்து கேரள சமையல் கலைஞர் மாயம்! அதிர்ச்சியில் உறவினர்கள்

அமெரிக்காவுக்கு சென்ற கப்பலில் இருந்து கேரள சமையல் கலைஞர் மாயம்! அதிர்ச்சியில் உறவினர்கள்
அமெரிக்காவுக்கு சென்ற கப்பலில் இருந்து கேரள சமையல் கலைஞர் மாயம்! அதிர்ச்சியில் உறவினர்கள்

தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இந்திய ஊழியர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் குருவில்லா (28). இவர் கடந்த 4 ஆண்டுகளாக 'எம்.டி. ஸ்ட்ரீம் அட்லாண்டிக்' என்ற சரக்கு கப்பலில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்தார்.

இந்த கப்பலானது கடந்த 31-ம் தேதி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜஸ்டின் குருவில்லா நாள்தோறும் தனது குடும்பத்தினருக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல்களையும், புகைப்படங்களையும் அனுப்புவது வழக்கம்.

ஆனால், கடந்த 7-ம் தேதி அவரது வாட்ஸ் அப்பில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை. இதையடுத்து, அவரது தாயார் ஜஸ்டினை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை.

இதனால், சந்தேகமடைந்த ஜஸ்டினின் குடும்பத்தினர், அவரை அக்கப்பலில் பணிக்கு எடுத்த நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அந்நிறுவனம், ஜஸ்டினின் குடும்பத்தினருக்கு 10-ம் தேதி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினர். அதில், அட்லாண்டிக் கடலில் தென் ஆப்பிரிக்கா எல்லை அருகே இருந்த போது ஜஸ்டின் திடீரென கப்பலில் இருந்து மாயமாகிவிட்டதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஜஸ்டினின் குடும்பத்தினர், அவர் பணிபுரிந்த கப்பல் ஊழியர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், கோட்டயம் எம்.பி. தாமஸ், தென் ஆப்பிரிக்கா தூதரகத்திடம் இதுகுறித்து விவரம் கேட்டுள்ளதாக ஜஸ்டினின் பெற்றோர் தெரிவித்தனர். தனது மகனுக்கு என்ன ஆனது என தெரியாமல் ஜஸ்டின் குடும்பத்தினர் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com