அமெரிக்க இந்திய மாணவர்களுக்கு உதவ ஹாட்லைன் உதவி மையம்
விசா மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில், அங்குள்ள இந்திய தூதரகம் உதவி மையத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் மாணவர்களுக்கான விசாவில் பயணிப்போர், அங்கு தங்குவதற்கான அனுமதியுடன், தங்கள் கல்வி தொடர்பான தொழிற்துறையில் பணியாற்றவும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் FARMINGTON என்ற பெயரில் போலியாக பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அதில் 600க்கும் மேற்பட்டோர் பயில்வதுபோல் மோசடி செய்து அவர்களுக்கு விசாவும், பணி அனுமதியும் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து விசா மோசடியில் ஈடுபட்டதாக இந்திய மாணவர்கள் 129 பேர் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், 24 மணிநேரமும் செயல்படும் ஹாட்லைன் உதவி மையத்தை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் நண்பர்கள் உதவிகளை பெறும் வகையில், 202-322-1190, 202-340-2590 ஆகிய தொலைபேசி எண்களும், cons3.washington@mea.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.