போரிடும் முறையில் மாற்றம்.. உலகுக்குச் சவால்விட முடிவு.. தயாராகும் இந்திய ராணுவம்!
உலகம் அறிவியல் யுகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவும் அதை நோக்கி ஓடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால், இந்திய ராணுவமும் தனது படைகளை மாற்றியமைக்க இருக்கிறது.
போரிடும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் இந்திய ராணுவம்!
இந்திய ராணுவம் தனது பாரம்பரியப் போர் முறைகளில் இருந்து மாறி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வேகமான தாக்குதல் உத்திகளை உள்ளடக்கிய ’மாற்றங்களின் தசாப்தம்’ (Decade of Transformation 2023–2032) என்ற இலக்கை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருகிறது. அதன்படி, வேகம், நெகிழ்வுத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நமது இந்திய ராணுவம், தனது படைகளை மாற்றியமைக்க இருக்கிறது. முன்பெல்லாம் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவை பெரும்பாலும் தனித்தனியாகத் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்தன. ஆனால், இப்போது ஒரே கூட்டுப் போர் உத்தி வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, முப்படைகளையும் ஒருங்கிணைத்து ஒரே கூட்டுத் தலைமையின் கீழ் கொண்டுவரும் 'தியேட்டரைசேஷன்' (Theaterisation) பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன்படி, விண்வெளி (Space), சைபர் (Cyber Warfare) மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தரைப்படையுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப் புதிய கூட்டுப் பாதுகாப்புக் கொள்கைகள் (Joint Doctrines) வகுக்கப்பட்டுள்ளன.
அதாவது, வழக்கமான இராணுவ அமைப்புகள், ஒரு நடவடிக்கைக்கு முன்பு பல பிரிவுகளிலிருந்து வீரர்களையும் ஆயுதங்களையும் திரட்டிப் போர் புரிகின்றன. இது, பல மணி நேரம் எடுக்கக்கூடிய ஒரு செயல்முறையாக உள்ளது. அதைத் தவிர்க்கவே ஒருங்கிணைந்த போர்க்குழு (IBG) முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த போர் குழுக்கள் (IBG) என்றால் என்ன?
ஒருங்கிணைந்த போர் குழுக்கள் (IBG) என்பது அனைத்துப் படைகளையும் கொண்ட அமைப்புகளாக உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் போர்ப் பிரிவுகளையும் ஆதரவுச் சேவைகளையும் ஒரே படைப்பிரிவில் நிரந்தரமாக ஒருங்கிணைக்க முடியும். மேலும் தாமதத்தை நீக்கும் வகையிலும் இந்தப் போர்க்குழு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், போரிடும் முறைகள் மட்டுமல்லாமல், ராணுவத்தின் அடையாளமும் மாற்றப்பட்டு வருகிறது. புதிய 'ராணுவ சீருடைகள்' (Army Uniforms) கொள்கையின்படி, பிரிட்டிஷ் காலனித்துவ காலத்துச் சின்னங்கள், 'ராயல்' போன்ற வார்த்தைகள் மற்றும் தேவையற்ற பழைய சடங்குகள் நீக்கப்பட்டு வருகின்றன.
இந்தியப் பாரம்பரிய ஆடைகளான 'பந்தி ஜாக்கெட்' (Bandi Jacket) மற்றும் புதிய 'பேட்டில் ஜாக்கெட்' (Battle Jacket) போன்ற முறைகள் இணைக்கப்பட்டு, முற்றிலும் ஒரு நவீன, இந்திய அடையாளத்துடன் கூடிய ராணுவமாக இது மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது.
பதினேழாவது படைப்பிரிவிலிருந்து தொடக்கம்
ஒட்டுமொத்தமாக, இந்திய ராணுவம் மனிதர்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு படையாக இல்லாமல், தொழில்நுட்பம் மற்றும் அதிவேகத் தாக்குதல் திறனை (Network-Centric & Technology-Driven Force) அடிப்படையாகக் கொண்ட ஒரு நவீனப் படையாக உருவெடுத்து வருகிறது. ராணுவத்தின் மிகப்பெரிய கட்டமைப்புக் கொள்கை மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்னும் ஒரு மாதத்தில், தனது ஒருங்கிணைந்த போர்க் குழுக்களை (IBG) தனித்தனியாக அறிமுகப்படுத்த இருக்கும் இந்திய ராணுவம், பதினேழாவது படைப்பிரிவிலிருந்து இதை தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனாவுடனான எல்லையை எதிர்கொள்ளும் வகையில், பனாகர் அடிப்படையிலான 17-ஆவது 'மவுண்டன் ஸ்டிரைக் கார்ப்ஸ்' (Mountain Strike Corps) பிரிவில் இருந்து முதல் IBG குழுக்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. அதன்படி, ஒவ்வொரு IBG-யிலும் சுமார் 5,000 வீரர்கள் இருப்பார்கள். இதில் காலாட்படை (Infantry), பீரங்கிப்படை (Artillery), பொறியாளர்கள் (Engineers), சிக்னல்ஸ் மற்றும் மருத்துவப் பிரிவுகள் ஒரே குழுவாக நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும். இவை உத்தரவு கிடைத்த 48 மணி நேரத்திற்குள் மலைப் பிரதேசங்களில் மிக வேகமாகத் தாக்குதலைத் தொடுக்கும் திறன் கொண்டவையாகும். ஆகையால், இனி மற்ற நாடுகளுக்கும் சவால் விடும் வகையில் இந்திய ராணுவம் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

