சிக்கிமில் சிக்கிய 2500 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம்!
சிக்கிமில் இந்திய சீன எல்லையில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 2,500 சுற்றுலாப் பயணிகளை ராணுவம் மீட்டது.
வடமாநிலங்களில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. தாங்க முடியாத குளிர் அங்குள்ள மக்களை வாட்டி வருகிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் வாகனங்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்தியா-சீனா எல்லை அருகே நாதுலா என்ற இடத்துக்குச் சுற்றுலாச் சென்றவர்கள், பனிப்பொழிவால் அங்கிருந் து எங்கும் நகர முடியாத நிலையில் சிக்கிக்கொண்டனர்.
இதையறிந்த இந்திய ராணுவ வீரர்கள், பனிப்பொழிவில், சிக்கித் தவித்த சுமார் 2500 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு, இரண்டு வெவ் வேறு முகாம்களில் தங்க வைத்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம். அவர்களுக்கு குளிருக்குத் தோதான ஆடைகள், உணவு, மருந்து, மாத்திரைகளை ராணுவத்தினர் வழங்கினர்.
மேலும் சாலைகளை மூடியுள்ள பனியை அகற்றும் பணியிலும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.