பசியை ஒழிக்கப் பாடுபடும் இளைஞர் அங்கித் கவத்ராவுக்கு இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் ‘இளம் தலைவர்’ விருதை அளிக்க உள்ளார். லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையில் நடக்கும் இந்த விருது விழா, 29-ம் தேதி நடைபெற உள்ளது.
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அங்கித் கவத்ரா, கடந்த 2014-ம் ஆண்டு வேலையை உதறிவிட்டு ‘ஃபீடிங் இந்தியா’என்ற தன்னார்வ அமைப்பை தொடங்கினார். இதன் மூலம் வீடுகள், ஓட்டல்கள், கேன்டீன்கள் மற்றும் விழாக்களில் மீதமாகும் உணவைப் பெற்று, அதை பசியால் வாடுபவர்களுக்கும், உணவு தேவைப்படும் இடங்களுக்கும் விநியோகித்து வருகிறார்.
தொடக்கத்தில் வெறும் 5 பேருடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது இந்தியாவின் 43 நகரங்களில் 4,500 தன்னார்வலர்களின் துணையுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அரசியின் கவுரவமிக்க இளம் தலைவர்கள் விருதுக்கு அங்கித் கவத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கித் கவத்ராவுடன் 53 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 60 நபர்கள் இந்த விருதை 29-ம் தேதி பெற உள்ளனர்.
18 வயது முதல் 29 வயது வரையிலான, தலைமைப் பண்பு மிகுந்த இளைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.