இதுவரை பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய வான்வழி தாக்குதல்கள் ! ஒரு பார்வை
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த காலங்களில் இந்தியாவின் விமானப்படை நடத்திய தாக்குதகளைப் பற்றி காணலாம்.
1965 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர்:
1965ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. இந்தப் போரில் இந்திய விமானப்படை அதன் சிறப்பான செயல்பாட்டால் பாகிஸ்தான் விமான படைகளுக்கு தகுந்த பதிலடியை கொடுத்தது. இந்தத் தாக்குதலில் இந்தியா சார்பில் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட MiG-21 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இதுதான் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற முதல் வான்வழி போர்.
1971 ஆம் ஆண்டு வங்கதேச போர்:
1971 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து 4 இளம் விமானிகள் இந்திய வான் எல்லையை கடந்து சென்று தாக்குதல் நடத்தினர். இவர்கள் பாகிஸ்தானின் முரிட்(Murid)விமான தளத்தை தாக்கச் சென்றனர். இந்த தாக்குதலுக்கு மிராஜ் ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் F-86 ரக விமானங்கள் தாக்கப்பட்டன. முதல் முறையாக பாகிஸ்தானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து இந்தியா விமானங்கள் தாக்குதல் நடத்தியது குறிப்படத்தக்கது.
1999 கார்கில் போர்:
1999 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்தப் போரில் இந்திய விமானப்படை ‘Operation Safed Sagar(White sea)’ என்ற ஆபிரேஷ்னை நடத்தியது. இதில் MiG-27,MiG-21,மிராஜ்-2000 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த விமானங்கள் அனைத்தும் இந்திய எல்லையிலிருந்து கொண்டே பாகிஸ்தான் படைகள் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதலில் இந்தியா விமானப்படையின் பலம் பாகிஸ்தானின் விமானப்படையைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது. இதனால் கார்கில் போரில் இந்தியா வெற்றிப் பெற இது முக்கியமான ஒன்றாக அமைந்தது.
இத்தகைய தாக்குதல்களுக்குப் பிறகு தற்போது இந்திய விமானப்படை மற்றொரு துள்ளியமான தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் வான்வெளியில் இந்தியப் படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்தியா மறுபடியும் அதன் துள்ளியமான தாக்குதல் யுக்தியை வெற்றிகரமாக முடித்துகாட்டியுள்ளது. அத்துடன் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தகுந்த அஞ்சலியையும் செலுத்தியுள்ளது.