இலங்கை தாக்குதல் குறித்து கோவையில் கிடைத்த தகவல்: கடந்த வருடமே எச்சரிக்கை கொடுத்த இந்தியா!
கடந்த வருடம் கோவையில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட போதே இலங்கைக்கு உரிய எச்சரிக்கையை இந்தியா கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் உள்பட 35 வெளிநாட்டினரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த 500-க்கும் அதிகமானோர், பல்வேறு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. 9 பேர் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை அரசின் மெத்தனப்போக்கால் தான் இந்த தாக்குதல் தடுக்கப்படவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதல் குறித்து இந்தியா 3 முறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு கோவையில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவரான இஸ்மாயில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் என்பதும் அப்போது தெரியவந்தது.
அவரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. அவரிடம் கைப்பற்றப்பட்ட வீடியோவில் இலங்கையைச் சேந்த சஹ்ரான் ஹாசிம் இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக ஐஎஸ் உறுப்பினர்களின் நிலவரம் குறித்து இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வருடமே எச்சரிக்கை கொடுக்கப்பட்டும் இலங்கை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் இலங்கை தாக்குதலுக்கும் முதல் நாள் இந்தியா மீண்டும் எச்சரிக்கை விடுத்தது. அதற்கான ஆதாரங்களும் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் சில மணி நேரம் முன்பு கூட இந்தியா 3வது முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை ஒப்புக்கொண்ட அந்நாட்டு பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, ''இந்தியா எச்சரிக்கை கொடுத்தது உண்மை தான். ஆனால் தகவல் சம்பந்தபட்டவர்களுடன் பகிரப்படவில்லை'' என தெரிவித்துள்ளார்.