இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெண்ட்டிலேட்டர் சிகிச்சையில் 7423 பேர் !
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 4.16 சதவீதம் பேருக்கு மட்டுமே வெண்ட்டிலேட்டர் கருவி தேவைப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 4,72,985 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 71 ஆயிரம் பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வெண்ட்டிலேட்டர் தேவை குறித்து ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இப்போதைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 7,423 பேருக்கு வெண்ட்டிலேட்டர் வழங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 27,317 பேர் ஐசியூ வார்டுகளிலும், 28,301 கொரோனா நோயாளிகள், ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் "உலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும், அதிலிருந்து மீண்டு வருபவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்தபடியே இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதே ஒரே வழி. இப்போது அனைத்து மாநில அரசுகளும் அதனை செய்து வருகின்றன" என தெரிவித்துள்ளார்.