ஒன்று கூடும் 5 நாடுகள்.. புது வியூகம் வகுக்கும் இந்தியா!
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் அமைப்பே பிரிக்ஸ் ஆகும். இதன் 17ஆவது உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜுலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். பிரேசில் அதிபர் லுலா டா சில்வா மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறார்.
உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சி, பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இந்தியா தனது நிலைப்பாட்டை மாநாட்டில் வலியுறுத்தும் என்று தெரிகிறது. மேலும் வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களை முன்னிறுத்தும் இந்தியாவின் முயற்சி, பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முன்னெடுக்கும் முயற்சி..
பிரிக்ஸ் நாடுகளின் அமைப்பில் இந்தியாவின் பங்கேற்புக்கும் மாற்று வர்த்தக நாணயங்களை உருவாக்கும் முயற்சிகளுக்கும் வெளிப்படையாகவே அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருந்தது. குறிப்பாக அதிபர் டிரம்ப், பிரிக்ஸ் அமைப்பில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால், பிரிக்ஸ் கூட்டமைப்பின் மூலம் இந்தியா தனது சர்வதேச உறவுகளை வலுப்படுத்தி, உலக அரசியலில் தனது தாக்கத்தை நிலைநாட்ட விரும்புவதாக பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் பிரிக்ஸ் மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெறும் ரஷ்யா, இந்தியா, சீனா அடங்கிய ஆர்ஐசி மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்ததே காரணமாக கூறப்படுகிறது.