4,50,000 ரெம்டெசிவிர் குப்பிகளை இறக்குமதி செய்கிறது இந்தியா!
நாட்டில் ரெம்டெசிவிர் பற்றாக்குறையை போக்க, அந்த மருந்தை இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 75,000 குப்பிகளைக் கொண்ட முதல் சரக்கு இன்று இந்தியா வருகிறது.
இது தொடர்பாக ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'மத்திய அரசுக்கு சொந்தமான எச்எல்எல் லைப்கேர் லிமிடெட், அமெரிக்காவில் உள்ள ஜிலீட் சயின்சஸ் என்ற நிறுவனம், எகிப்து நாட்டைச் சேர்ந்த எவா மருந்தகம் ஆகிவற்றிலிருந்து 4,50,000 குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜீலீட் சயின்சஸ் 75,000 முதல் 1,00,000 குப்பிகளை இன்னும் ஒரிரு நாட்களில் விநியோகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 1 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் மே 15-ம் தேதிக்குள் விநியோகிக்கப்படும். எவா பார்மா நிறுவனம் தொடக்கத்தில் 10,000 குப்பிகளும், அதைத் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை 50,000 குப்பிகளை ஜூலை வரை விநியோகிக்கும்.
உள்நாட்டிலும் ரெம்டெசிவிர் உற்பத்தியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வரை, இந்தியாவில் உள்ள ஏழு ரெம்டெசிவர் தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை மாதத்துக்கு 38 லட்சம் குப்பிகள் என்ற அளவிலிருந்து, மாதத்துக்கு 1.03 கோடி என்ற அளவுக்கு அதிகரித்துள்ளன. கடந்த ஏழு நாட்களில், இந்த நிறுவனங்கள் மொத்தம் 13.73 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை விநியோகித்துள்ளன. கடந்த ஏப்ரல் 11ம் தேதி 67,900 குப்பிகள் என்ற அளவில் இருந்த தினசரி விநியோகம், ஏப்ரல் 28ம் தேதி 2.09 லட்சம் குப்பிகளாக அதிகரித்தது.
ரெம்டெசிவர் விநியோகத்தை சுமுகமாக மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்தியாவில் ரெம்டெசிவர் அதிகம் கிடைப்பதற்காக அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அனைவரும் வாங்குவதற்கேற்ப, ரெம்டெசிவிர் மருந்து விலை ரூ.3,500-க்கு கீழ் குறைக்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தியை அதிகரிக்கவும், அதிக அளவில் கிடைக்கச் செய்யவும், அதற்கான சுங்க வரி, ரெம்டெசிவிர் தயாரிப்புக்கு பயன்படும் ஏபிஐ மற்றும் பீட்டா சைக்ளோடெக்ஸ்டிரின் ஆகியவற்றுக்கான சுங்க வரி ஆகியவற்றை 2021 அக்டோபர் 31ம் தேதி வரை ரத்து செய்ய வருவாய்த்துறை கடந்த ஏப்ரல் 20ம் தேதி அறிவித்தது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.