ஒரு சொட்டு நீர் கூட செல்லக்கூடாது.. பட்டினியால் வாடப்போகும் பாகிஸ்தான்.. இந்தியாவின் பிரம்மாஸ்திரம்?
இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தில் இருந்து விலகி, பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுத்து, இந்திய விவசாயிகளுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் விவசாயம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடும் வாய்ப்பு உள்ளது.
செய்தியாளர் - பிரவீன் ஜோஷ்வா
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
இது இரண்டு நாடுகளுக்கு இடையே போர் சூழலை ஏற்படுத்திய நிலையில், பின்னர் இரு நாட்டு ராணுவமும் சந்தித்து பேசியதன் அடிப்படையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்துள்ளது.
அதன் காரணமாக சிந்து நதி ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. மேலும், இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியாவின் வடக்கு மாநிலங்களுக்கு திருப்ப இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனத்தை தெரிவித்தாலும், இந்திய அரசு தனது நடவடிக்கையை தொடர்ந்து வருகிறது.
இந்தியா கையிலெடுத்த ஆயுதம்?
இதனிடையே பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை முழுமையாகத் தடுத்து, அதை இந்திய விவசாயிகளின் நலனுக்காக பயன்படுத்தவுள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் வி. சோமண்ணா கூறியுள்ளார்.
மேலும் ஜம்மு–காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சிந்து மற்றும் அதன் துணை நதிகளில் அணைகள் கட்டி, உபரி நீரை மடைமாற்றி இந்தியப் பகுதிகளுக்கு பயன்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் சிந்து மற்றும் அதன் கிளை நதிகளில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத நிலை ஏற்படும்.
பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பங்கு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யும் சிந்து நதி இல்லை என்றால் பாகிஸ்தானில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும். இதனால் பாகிஸ்தானின் வரலாற்றில் இல்லாத அளவு வறுமையும், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும்.
இதனை கருத்தில் கொண்டே இந்திய அரசு இவ்வாறு ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அரசு சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசென்றால் அது இந்தியாவை கட்டுப்படுத்தும் விதமாக சில உத்தரவுகளை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

