ட்ரம்ப் வருகைக்காக குடிசைகளை மறைக்க 7 அடி சுவர்? - அகமதாபாத் மக்கள் அதிர்ச்சி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏழு அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு வசித்துவரும் மக்களை காலி செய்யவும் அகமதாபாத் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24ஆம் தேதி இந்தியா வருகிறார். அவரின் பயணத் திட்டத்தின்படி குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு முதலில் செல்கிறார். அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவரும் பிரதமர் மோடியும் பேசுகிறார்கள். இந்த நிலையில், இந்த மைதானம் செல்லும் வழியில் குடிசைப் பகுதியில் வசித்து வரும் 45 குடும்பங்களுக்கு அகமதாபாத் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்திருப்பதாகவும் ஏழு நாட்களுக்குள் குடிசையை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் குடிசைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. இதற்கு குடிசைவாசி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குடிசை வாசிகளை காலி செய்தாலும் ட்ரம்ப் கண்ணில் குடிசை தென்பட்டுவிடும் என்பதால் அதை மறைக்க ஏழு அடி உயரத்துக்கு 400 மீட்டர் நீளத்துக்கு சுவர் எழுப்பும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. யாருக்காக இந்தச் சுவர் என்று கூடத் தெரியாமல் இந்தப் பகுதியில் வசித்து வருபவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக பட்டா கேட்டு அரசிடம் முறையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், ட்ரம்ப் வருகைக்காக அவர்களை காலி செய்ய அகமதாபாத் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் குடிசைவாசி ஒருவர் கூறுகையில் "காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள், குழந்தைகளை வைத்திருக்கும் போது நோட்டீசில் குறிப்பிட்டிருக்கும் நாட்களுக்குள் எப்படி வெளியேற முடியும்? அதற்குள் எப்படி உடமைகளை வேறு பகுதிக்கு மாற்ற முடியும். எங்களது நிலைமை குறித்து அரசிடம் தெரிவிக்க விரும்புகிறேன். அப்படி என்னதான் நடக்கப்போகிறது என்று தெரியவில்லை" என்றார் அவர்.