வீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வேண்டுகோள்
பாகிஸ்தான் வசமுள்ள இந்திய விமானப்படை வீரரை பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் விமானப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
இருப்பினும், இன்று காலை எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலின் போது இந்திய விமானி தங்கள் வசம் பிடிபட்டதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் இந்தியாவிடம் தெரிவிக்காமல் இருந்தது.
இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிப் கஃபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிடிபட்ட வீரரின் படத்தை வெளியிட்டு இருந்தார். இந்திய பைலட் கைகளில் டீ கப்புடன் இருப்பது போல் அந்த படம் இருந்தது. கூடவே, ஒரே ஒரு இந்திய பைலைட் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ராணுவ நடைமுறைகளின் படி அவர் சரியா நடத்தப்பட்டு வருவதாகவும் அசிப் கஃபூர் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து, பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானப்படை விமானியை பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், காயமடைந்த நிலையிலான நிலையில் இந்திய பைலட்டின் படத்தை வெளியிட்டது சர்வதேச மனிதநேய ஜெனிவா ஒப்பந்த விதிமீறல் என்று கூறி இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. போர்க்காலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய ஜெனிவா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறிவிட்டதாக கூறப்படுகிறது.
1949 ஜெனிவா ஒப்பந்தம்:
சிறைப்பிடிக்கப்படும் பிறநாட்டு வீரர்களின் உடலுக்கு, உயிருக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடாது
உடல் உறுப்புகளை வெட்டி அகற்றுதல் கூடாது
கொடுமை செய்தல், சித்ரவதை செய்தல் கூடாது
தன்மானத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது
முறைப்படி நிறுவப்படாத நீதிமன்றங்கள் மூலம் மரணதண்டனை நிறைவேற்றுதல் கூடாது
சிக்கிய வீரரின் அடையாளத்தை உறுதிபடுத்தி அவரது சொந்த நாட்டுக்குத் தெரியப்படுத்த வேண்டும்
தேவையான மருத்துவ வசதிகளை அவருக்கு வழங்க வேண்டும்