திட்டமிட்ட கொலை.... பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
முன்னாள் கடற்படை அதிகாரிக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை திட்டமிட்ட கொலை என இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்துத் தெரிவித்துள்ளது.
குல்பூஷன் ஜதேவ் எனும் முன்னாள் கடற்படை அதிகாரி பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க பலுஜிஸ்தானில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளை தூண்டினார் எனவும் அவரை இந்தியாவின் உளவு அமைப்பான ரா நியமித்தது எனவும் குற்றம்சாட்டப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், குல்பூஷன் ஜதேவ் விசாரிக்கப்படுகிறார் என்பது கூட இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தானால் தெரிவிக்கப்படவில்லை. அடிப்படை சட்டம் மற்றும் நீதி கூட இந்த விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. இந்தியாவும் இந்திய மக்களும் இதைத் திட்டமிட்ட கொலை என்றுதான் கருதுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு விளக்கம் கேட்டு வெளியுறவுத்துறைச் செயலாளர் சம்மன் அனுப்பியுள்ளார்.