இந்தியாவுக்கு எதிரான சதிகளை முறியடிக்கும் ரகசியப் படை !

இந்தியாவுக்கு எதிரான சதிகளை முறியடிக்கும் ரகசியப் படை !
இந்தியாவுக்கு எதிரான சதிகளை முறியடிக்கும் ரகசியப் படை !

லடாக் எல்லையில் சீனா ராணுவம் இந்தியாவைச் சீண்டிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு ரகசியப் படைப்பிரிவின் பெயர் பரவலாகப் பேசப்படுகிறது.

விண்ணில் இருந்து குதிப்பார்கள். நீருக்கடியில் பல மணி நேரம் காத்திருப்பார்கள். சேற்றைப் பூசிக் கொண்டு அடர்வனத்தில் பதுங்கியிருப்பார்கள்.ஆழமான பள்ளத்தாக்குகளிலும் அச்சுறுத்தும் மலைகளிலும் தடையில்லாமல் பயணிப்பார்கள். எதிரிகள் தென்பட்டால் நொடியில் அழித்துவிடுவார்கள். இவர்கள் இந்தியாவின் ரகசியப் படை… SFF. 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர், மாலத்தீவு ஆட்சிக்கவிழ்ப்பு, கார்கில் யுத்தம், காந்தஹார் விமானக் கடத்தல் என இந்தியாவுக்கு எதிரான சதிகளை முறியடித்ததில் முக்கியப் பங்கு இவர்களுக்கு உண்டு.

எஸ்டாப்ளிஸ்மென்ட் 22 அல்லது சுருக்கமாக 22 என பல பெயர்களில் அழைக்கப்படும் SFF படைப் பிரிவு, 1962-ஆம் ஆண்டு சீனாவுடனான போருக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி இந்தப் படைப் பிரிவை உருவாக்குவதில் இந்தியாவுக்கு உதவினார். எல்லையைக் காப்பது, எதிரிகளின் சதிகளை முன்னரே கண்டறிந்து அவற்றை முறியடிப்பது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பது போன்றவை இவர்களின் முக்கியப் பணிகள். திபெத்தில் இருந்து தப்பி வந்தவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படையில், இப்போதும் திபெத்தியர்களே அதிகம்.

ஆயிரக்கணக்கான வீரர்கள் இப்படையில் இருப்பதாகக் கருதப்பட்டாலும், ஒட்டுமொத்தமான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதில்லை. இப்படைக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் முறை மிகவும் கடுமையானது. ராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் முகாமில் முதற்கட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பிறகு லடாக்கில் உள்ள மலைப்பகுதிகளில் பயிற்சியில் கடும் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

லடாக் எல்லைப் பகுதிகளில் சீனப் படைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் எஸ்எஸ்எஃப் படை வீரர்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ராணுவத்துடன் நேரடித் தொடர்பு கிடையாது. மத்திய அமைச்சரவைச் செயலகத்தின் கீழ் இயங்குகிறது எஸ்டாப்ளிஸ்மென்ட் 22. இந்தியாவின் உளவு அமைப்புகளின் பல பணிகளிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்களது பெரும்பாலான நடவடிக்கைகள் மிகவும் ரகசியமானவை. வெற்றிக் கொண்டாட்டங்களும், உயிர்த்தியாகங்களும் கூட.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com