கின்னஸ் பட்டியலில் இடம் பிடித்த நீளமான கூந்தலை கொண்ட இளம்பெண்
குஜராத் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உலகின் நீளமான முடியைக் கொண்ட பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் நிலான் ஷி படேல். இவரது 5.7 அடி கூந்தல் தற்போது கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இது குறித்து நிலான் ஷி படேல் கூறுகையில், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாப் கட் செய்தேன். அது எனக்கு பிடிக்கவில்லை. அப்போது முடிவெடுத்தேன். இனி முடி வெட்டவே கூடாது. முடியை நீளமாக வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.
பின்னர் முடி வளர்ந்ததும் முடியை வெட்ட மனமில்லாமல் நீளமாக வளர்க்க ஆரம்பித்தேன். நான் எனது 6 வயதிலிருந்து முடியை வெட்டவே இல்லை. தனது தாய் மற்றும் சகோதரர் தலைமுடியை வளர்க்க தனக்கு உறுதுணையாக இருந்தனர். என் முடியை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வேன்.
முடியை பராமரிக்க நான் நிறைய பிரச்னைகளை சந்திப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் எவ்வித பிரச்னையையும் சந்திக்கவில்லை. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
நான் விளையாட செல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் வேலை செய்யும்போதோ எனக்கு எளிதாக இருக்கும் வகையில் என் முடியை பின்னல் போட்டுக்கொள்வேன்” என தெரிவித்தார்.