முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி காலமானார்

முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி காலமானார்
முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி காலமானார்

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமைக்குரிய அன்னா ராஜம் மல்ஹோத்ரா மும்பையில் காலமானார். அவருக்கு வயது 91.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 1927-ம் ஆண்டு பிறந்த அன்னா ராஜம், கோழிக்கோட்டில் தன் பள்ளிபடிப்பை முடித்துவிட்டு சென்னை பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார். பிறகு 1950-ம் வருடம் இந்திய ஆட்சி பணி தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்று சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனார். ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது ஓசூரில் முதன்முதலாக துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பில் இருந்த போது ஊருக்குள் வந்து துன்புறுத்தும் ஆறு யானைகளை சுட்டுக்கொல்லும் உத்தரவை பிறப்பிக்க மறுத்தார். மாறாக யானைகளை காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கையை எடுத்தார்.

இவர் தன் சக ஆட்சிப்பணி அதிகாரியான ஆர்.என் மல்கோத்ராவை திருமணம் செய்துகொண்டார். மல்ஹோத்ரா ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 1985-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டுவரை பதவி வகித்தார். 

ஐ.ஏ.எஸ் தேர்வின் நேர்முகத் தேர்வின்போது, பெண்கள் பணியாற்ற ஏதுவான துறைகளைத் தேர்வு செய்யுமாறு இவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மக்களுக்காக நேரடியாகக் களமிறங்கிப் பணியாற்ற விரும்புகிறேன் கூறி மெட்ராஸ் கேடரிலேயே பதவி ஒதுக்குமாறு கேட்டு வாங்கிக்கொண்டார். 

’ராஜாஜி முதல்வராக இருந்தபோது, ‘பெண்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக சரியாக கையாள முடியாது என்று கூறினார். ’நிரூபிக்க வாய்ப்பே கொடுக்காமல் எப்படி இதை சொல்ல முடியும்?’ என்று அவரிடம் வாக்குவாதம் செய்து பொறுப்பை பெற்றேன்’ என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் அன்னா ராஜம்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அவருடன் 8 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ராஜாஜி உள்ளிட்ட 7 முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றியவர் இவர்.

1982 ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி எம்.பியாக இருந்தபோது அவருடன் பணியாற்றிய அவர், டெல்லியில் 1982-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார். 

அன்னா ராஜமுக்கு 1989-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்திய ஆட்சிப் பணியில் அவர் சேரும்போது, `பெண்கள் திருமணம் செய்துகொண்டால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்’ என்ற விதி அமலில் இருந்தது. பின்னர் அந்த விதி திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com