குஜராத்தில் திறக்கப்பட்ட டைனோசருக்கான முதல் அருங்காட்சியகம்!
இங்கு மட்டும்தான் 65 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த டைனோசர் முட்டைகளை தொட்டுப்பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்
இந்தியாவிலேயே முதன்முறையாக குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் டைனோசருக்கான அருங்காட்சியகத்துடன் கூடிய பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள பாலசினோர் அருகே இருக்கும் கிராமம் ரையோலி. இங்கு உலகத்திலேயே மூன்றாவது மிகப்பெரிய புதைப்படிவங்களும், அதுமட்டுமல்லாது உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய டைனோசருக்கான எலும்புக்கூடு இருக்கிறது எனவும் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது.
மேலும், இந்த ரையோலி கிராமத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகள் கண்டறியப்பட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் தற்போது வரை பாதுகாத்து வரப்படுகிறது. இங்கு மட்டும்தான் 65 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த டைனோசர் முட்டைகளை தொட்டுப்பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு
இந்த இடத்தை தொல்பொருள் ஆராய்ச்சிக்கான இடமாக மாற்றவும், சுற்றுலாத்தளமாக்கவும் ஆய்வாளர்கள் மற்றும் அப்பகுதியை சார்ந்தவர்கள் முப்பது ஆண்டுகளாக போராடி வந்தனர்.
இந்நிலையில் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த குஜராத் மாநில சுற்றுலாத்துறை டைனோசருக்கான அருங்காட்சியகத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த 5 ஆண்டுகளாக அருங்காட்சியகம் கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், பணிகள் முடிக்கப்பட்டு டைனோசருக்கான அருங்காட்சியம் நேற்று திறக்கப்பட்டது.
டைனோசருக்கான அருங்காட்சியகத்தை காண விரும்புபவர்கள், அகமதாபாத்திற்கு விமானம் அல்லது ரயில் மூலம் சென்று அங்கிருந்து அரை மணி நேர பயணத்தில் பாலசினோரை அடையலாம்.