அதிகரிக்கும் சாலை விபத்து மரணங்கள்.. காரணம் என்ன? ஆய்வு அறிக்கை வெளியீடு!
இந்தியாவில் சாலை விபத்து மரணங்களுக்குத் தரமான ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாததே முக்கியக் காரணம் என்கிறது மத்திய அரசின் அறிக்கை. இதன்படி, 2024ஆம் ஆண்டில் விபத்தில் இறந்த 81,780 இருசக்கர வாகன ஓட்டிகளில் 40 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாதவர்கள்; கார் விபத்தில் இறந்தவர்களில் 50 சதவீதம் பேர் சீட் பெல்ட் அணிந்திருந்தால் பிழைத்திருக்கலாம். கவலைக்குரிய விஷயமாக, தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட மரணங்களில் 7,744 உயிரிழப்புகளுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
தரமான ஹெல்மெட் அணிந்தால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 42% அதிகரிக்கும் என ஐ நா கூறுகிறது. தமிழ்நாட்டில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மீறினால், 1,000 ரூபாய் அபராதத்துடன் ஓட்டுநர் உரிமமும் 3 மாதங்களுக்குச் சஸ்பெண்ட் செய்யப்படும். அபராதத்திற்குப் பயந்து சாலையோர மலிவான, போலி ஹெல்மெட்டுகளை வாங்காமல், ISI முத்திரை கொண்ட தரமான ஹெல்மெட்டுகளையே வாங்க வேண்டும். விபத்தின் போது அதிர்வுகளைத் தாங்க, வெளிப்பகுதி உறுதியாகவும் , உள்பகுதி தடிமனான தெர்மாகோல் கொண்டதாகவும் இருக்க வேண்டும். தலைக்குச் சரியாகப் பொருந்தும், முழு முகத்தையும் மூடும் ஹெல்மெட்டுகளே முழுப் பாதுகாப்பைத் தரும் என்கின்றனர் நிபுணர்கள்.

