இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா; 24 மணி நேரத்தில் 81,446 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81,446 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச பாதிப்பு இதுவே.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தினந்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் இருந்து வந்த நிலை மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் பாதிப்பு 81,446- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 469 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 50,356 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் இப்படி எகிறி இருப்பது அதிர வைப்பதாக அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் 11-ம் தேதிக்கு பிறகு இதுவே அதிகபட்ச பாதிப்பு என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 84.61 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,23,03,131ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,15,25,039 ஆக இருக்கிறது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 6,14,696 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,63,396 ஆக உள்ளது.