இந்தியா- பாகிஸ்தானுக்கிடையே சிக்கலாகத் தொடரும் ஆசாத் காஷ்மீர், கில்ஜித் பல்திஸ்தான்!

இந்தியா- பாகிஸ்தானுக்கிடையே சிக்கலாகத் தொடரும் ஆசாத் காஷ்மீர், கில்ஜித் பல்திஸ்தான்!

இந்தியா- பாகிஸ்தானுக்கிடையே சிக்கலாகத் தொடரும் ஆசாத் காஷ்மீர், கில்ஜித் பல்திஸ்தான்!
Published on

இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இருக்கின்றன. ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இரண்டு பகுதிகள் தீர்க்கப்படாத சிக்கலாக இருந்து வருகின்றன. அவை ஆசாத் காஷ்மீர், கில்ஜித் பல்திஸ்தான்.

இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையிட்டதன் விளைவாக இந்தியாவிடமும் இல்லாமல், பாகிஸ்தானிடமும் முழுமையாகச் செல்லாமல் இந்த இரு பகுதிகளும் தவித்து வருகின்றன. இந்த இரு பகுதிகளும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என இந்தியாவில் பொதுவாக அறியப்படுகின்றன. ஆசாத் காஷ்மீர் பகுதி மொத்தம் 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் மொத்த மக்கள் தொகை 46 லட்சம். முற்றிலும் தன்னாட்சியைப் பெற்றிருக்கும் இந்தப் பகுதிக்கென தனி நாடாளுமன்றமும் அமைச்சரவையும் உண்டு.

இந்தப் பகுதிக்கான பிரதமரும், அதிபரும் தனியாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். தனி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்றவையும் ஆசாத் காஷ்மீரில் செயல்படுகின்றன. எனினும் முக்கியமான நிர்வாகப் பொறுப்புகளை பாகிஸ்தான் அரசில் உள்ள காஷ்மீர் விவகாரங்களுக்கான அமைச்சரவை கவனித்துக் கொள்கிறது.

2005-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் ஆசாத் காஷ்மீர் பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர். பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியிருக்கும் இந்தப் பகுதி, நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிப்படைந்தது. தற்போது பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகளை நம்பியே இந்தப் பிராந்தியம் செயல்பட்டு வருகிறது.

கில்ஜித் பல்திஸ்தான் என அறியப்படும் காஷ்மீரின் மற்றொரு பகுதி, பாகிஸ்தானின் ஒரு மாநிலம் போலச் செயல்பட்டு வருகிறது. இதற்கென ஒரு ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனும் இந்தப் பகுதி தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இமயமலையின் 50க்கும் மேற்பட்ட உயரமான சிகரங்கள் இந்தப் பிராந்தியத்துக்குள் அமைந்திருக்கிறது. ஆர்க்டிக் பகுதிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பனிப்பாறைகள் அமைந்திருக்கும் பகுதியும் இதுதான். மலையேற்ற வீரர்களின் முக்கியமான களமாகவும் இது அமைந்திருக்கிறது. இந்தப் பகுதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்கள் காரணமாக, இவை பாகிஸ்தானுடன் இணைக்கப்படுவது சட்ட ரீதியாகச் சாத்தியமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com