ஆசிஃபா பாலியல் வழக்கு: பார் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஜம்மு- காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அம்மாநில பார் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி உள்ள நிலையில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விடாமல் வழக்கறிஞர்கள் சிலர் தடுத்ததாக புகார்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றம் அதன் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் பெண் வழக்கறிஞர் ஆஜராகாமல் தடுக்கப்பட்ட புகார் குறித்தும் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இப்புகார்கள் குறித்து ஜம்மு- காஷ்மீர் பார் கவுன்சில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது நோட்டீஸில் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர்களின் செயல் குறித்து இந்திய பார் கவுன்சிலும் காஷ்மீர் பார் கவுன்சிலும் விளக்கம் தர வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பலரும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் பார் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.