மக்களுக்கு நேரடியாக பணத்தைக் கொடுப்பதன் மூலம் பொருளாதாரம் மேம்படும் -அபிஜித் பானர்ஜி

மக்களுக்கு நேரடியாக பணத்தைக் கொடுப்பதன் மூலம் பொருளாதாரம் மேம்படும் -அபிஜித் பானர்ஜி

மக்களுக்கு நேரடியாக பணத்தைக் கொடுப்பதன் மூலம் பொருளாதாரம் மேம்படும் -அபிஜித் பானர்ஜி
Published on

மக்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பதன் மூலம் பல்வேறு பொருட்கள் மீதான நுகர்வு அதிகரித்து பொருளாதாரம் மீண்டு செல்வதற்கான வழி ஏற்படும் என ராகுல் காந்தியுடனான கலந்துரையாடலில் பொருளாதார வல்லுனர் அபிஜித் பானர்ஜி  தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் கடுமையாக சரிவடைந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நிறைவடைந்த பின்னர் இந்திய பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து ராகுல் காந்தி பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் ஆலோசனை நடத்தினார். அவர் ஏழை மக்களின் இயல்பு நிலையை மீட்டெடுக்க 60,000 கோடி தேவைப்படும் என கூறியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து இன்று பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி உடன் கலந்துரையாடினார்.

அப்போது பானர்ஜி பேசும்போது “ பொது முடக்கத்திற்கு பின் ஏழைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவர்களின் கைகளில் பணத்தை நேரடியாக கொடுக்க வேண்டும். அப்போது அந்த பணத்தை அவர்கள் செலவு செய்வார்கள். இதனால் இயல்பாகவே பணப்புழக்கம் அதிகரிக்கும். மேலும் பொது முடக்கத்திற்கு பின் ஏழைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவர்களுக்கு ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட தற்காலிக ரேஷன் அட்டையை வழங்க வேண்டும். அந்த அட்டை மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே உணவுப்பொருட்களுக்கான தொகுப்பை பெற்றுக்கொள்ள வழி செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்கள் பசியால் வாடுவதை தடுக்க முடியும். அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா போன்ற நாடுகள் தங்களின் மொத்த ஜிடிபியில் இருந்து 10 சதவீதத்தை சலுகைகளுக்காக செலவழிக்கின்றனர்.  

சிறு குறு நிறுவனங்கள் கடன் தொகைகளை செலுத்த கால அவகாசம் அளித்தது நல்ல விஷயம். ஆனால் இது போதாது. ஓராண்டுக்கான கடன் தொகைகளை மத்திய அரசு ரத்து செய்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் ஊரடங்கால் சில நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன , அம்மாதிரியான நிறுவனங்களின் கடன்களை மத்திய அரசு ரத்து செய்து, அவை மீண்டும் செயல்பட வழி வகை செய்ய வேண்டும்" என்று பானர்ஜி பேசினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com