2025இல் 166 புலிகள் இறப்பு.. பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட புதிய தரவுகள்!
கடந்த 2025இல் மொத்தம் 166 புலிகள் உயிரிழந்திருப்பதாக புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட புதிய தரவுகளில் தெரிய வந்துள்ளது.
புலி இந்தியாவின் தேசிய விலங்கு. ஆனால், கடந்த 2025இல் மொத்தம் 166 புலிகளை நாம் பறிகொடுத்திருக்கிறோம். இதுகுறித்து புதிய தலைமுறை காலநிலை அணிவழங்கும் தொகுப்பைப் பார்க்கலாம். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 2025இல் மட்டும் இந்தியாவில் மொத்தம் 166 புலிகள் உயிரிழந்துள்ளன. 2024ஆம் ஆண்டைவிட 40 புலிகள் அதிகமாக உயிரிழந்திருக்கின்றன. உலகில் உள்ள மொத்த புலிகளில் 75 சதவீதம் இந்தியாவில்தான் வாழ்கின்றன. வங்கப் புலி, சுந்தரவனப் புலி, மத்திய இந்தியப் புலி, மேற்குத் தொடர்ச்சி மலைப் புலி, இமயப் புலி, வடகிழக்குப் புலி என மொத்தம் 6 வகையான புலிகள் நம் நாட்டுக் காடுகளின் பல்லுயிர் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
2018ஆம் ஆண்டில் 2,967ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2022இல் 3,682ஆக உயர்ந்தது. அதே சமயம், அவற்றின் இறப்பு விகிதமும் அதிகரித்துவருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் புலிகளின் இறப்பு குறித்த புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம். 2023இல் புலிகள் இறந்தன. இந்த எண்ணிக்கை 2024இல் 126ஆக குறைந்தது. இதுவே 2025இல் 166 ஆகஅதிகரித்திருக்கிறது. மாநில வாரியாகப் பார்க்கும்போது, அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 55 புலிகள்உயிரிழந்துள்ளன. மகாராஷ்டிராவில் 38, கேரளத்தில் 13, அசாமில் 12 புலிகள் என உயிரிழப்புகள் நீடிக்கின்றன. தமிழ்நாட்டிலும் கடந்த ஆண்டில் 12 புலிகள் மரணமடைந்துள்ளன. காடுகளின் பரப்பு சுருங்குவது, சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் மின்சார வேலிகளில் சிக்கி உயிரிழப்பது போன்றவையே இந்த மரணங்களுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

