LNG ரயில் அறிமுகம்! இந்தியாவில் இதுதான் முதல்முறை!
செய்தியாளர் - கார்த்திகேயன்
அனு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி, மிகப்பெரிய போருக்கு காரணமாக அமைந்தது. இந்த போரால், தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலக அளவில் மிகப்பெரிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. எங்கே? ஏதோ ஒரு மூலையில் இரண்டு நாடுகள் போரிட்டுக் கொள்வதால், இந்தியாவில் உள்ள சாதாரண குடிமக்கள் வரை பாதிக்கப்பட்டனர். இயற்கை எரிவாயுவை வெளிநாடுகளில் இருந்து பெறுவதால்தான் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மாற்று எரிசக்திக்கு மாற வேண்டும் என்று முடிவு எடுத்துள்ள மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதன்முறையாக, எல்.என்.ஜி மூலம் இயங்கும் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரயில்வேக்கு ஏற்படும் செலவைக் குறைக்க, நாட்டின் முதல் எல்.என்.ஜி. ரயில் சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தில் தொடங்கி வைத்திருப்பது கவனம் பெற்றுள்ளது. குஜராத்தின் சபர்மதியில் இருந்து மகேசனா சந்திப்பு வரை, 8 பெட்டிகளுடன் இந்த எல்.என்.ஜி ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் இரு எஞ்ஜின்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 1,400 குதிரை திறன்கள் கொண்டவை. 2,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட எல்.என்.ஜி சேமிப்புத் தொட்டியும், இந்த ரயிலில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக எல்.என்.ஜி நிரப்பப்பட்டிருந்தால், ஒரு எஞ்ஜினை கொண்டு 444 கிலோ மீட்டர் வரை ரயிலை இயக்க முடியும். வழக்கமான டீசல் எஞ்ஜின் ரயில்களைப் போலவே, இதுவும் 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த எல்.என்.ஜி ரயிலால், டீசல் பயன்பாடு மற்றும் போக்குவரத்து செலவு பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே உள்ள டீசல் எஞ்ஜின் கொண்ட ரயில்கள், டீசல் மற்றும் எல்.என்.ஜி ஆகிய இரண்டிலும் இயங்கும் வகையில் மாற்றி வடிமைக்கப்பட்டுள்ளது. டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் ஒரு நடைமுறை தீர்வாக, இந்த எல்.என்.ஜி தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே துறை அறிமுகம் செய்து வைத்துள்ளது. எதிர்காலத்தில், மின்மயமாக்கப்படாத ரயில் வழித்தடங்களில், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க, எல்.என்.ஜி மற்றும் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருள் கொண்ட ரயில்கள் முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

