இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்‘நோ டு ஜெய் ஸ்ரீராம்’ ஹேஷ்டேக்
சில மரணங்கள் அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிடுவதில்லை. அப்படிப்பட்ட சம்பங்களில் ஒன்றுதான், 2015 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி பகுதியில், மாட்டுக் கறி வைத்திருந்ததாக கூறி முகமது அக்லாக் என்ற இஸ்லாமிய முதியவர் அடித்துக் கொல்லப்பட்டது. அந்தக் கொடூரமான சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பைக் திருட வந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கும்பல் தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த சனிக்கிழமை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகள் வரை மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய்ஹிந்த்’ கோஷங்களை சொல்ல சொல்லி கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்று அடுத்தடுத்து 5 சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், ஜார்க்கண்ட்டில் தப்ரீஸ் அன்சரி என்ற 25 இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில், ரத்தக் கறைகள் படிய வலம் வரும் அந்தப் புகைப்படம் காண்பவர் நெஞ்சை கணக்க செய்துள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த வாரம் ஜூன் 18ம் ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற்றது. இளைஞர் தப்ரீஸை 'ஜெய் ஸ்ரீராம்' எனக் கூறச்சொல்லி ஏழு மணிநேரம் கட்டி வைத்து அடித்ததில் அவர் மயக்கமடைந்தார். செவ்வாய்கிழமை தாக்குதலுக்கு ஆளான அவர் சனிக்கிழமைதான் உயிரிழந்துள்ளார். தாக்குதல் நடத்தியதுடன் அவரை போலீசில் ஒப்படைத்துள்ளனர். முதலில் அவரை சிறையில் அடைத்து அதன் பின்னர்தான் காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் தங்களையும் சிறையில் அடைத்துவிடுவதாக போலீசார் மிரட்டியதாக அன்சாரியின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
இந்தச் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் அதே நேரத்தில், மேற்குவங்கத்தின் பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஹபீஸ் முகமது சஹ்ருக் ஹல்தார் (26) என்ற இஸ்லாமிய மத போதகர், ரயிலில் 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம் எழுப்ப கூறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். ஜெய் ஸ்ரீராம் எனக் கூறச் சொல்லி தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர் கதையாவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், #NoToJaiShriRam ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாவதாக ட்ரெண்ட் ஆகியுள்ளது. அதில், சக மனிதர்கள் மீது கடவுளின் பெயரால் தாக்குல் நடத்த வேண்டாம் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு என்றும் இங்கு இந்து தாலிபன்கள் வேண்டாம் என்றும் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த ஹேஷ்டேக்கில் இணைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கருத்துக்கள் தமிழில்தான் உள்ளன. அதாவது தமிழகத்தில் இருந்தே அதிக அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் பல்வேறு கார்ட்டூன்களும் வன்முறை சம்பவத்திற்கு எதிராக பகிரப்பட்டு வருகிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இன்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி “தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதல் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும். கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது. நியாயப்படுத்தவும் முடியாது” என்று கூறியுள்ளார்.