'மனித உரிமை மீறல்களின் தலைமையிடமாக இந்தியா!' - அமெரிக்க அரசு சொல்வது என்ன?

'மனித உரிமை மீறல்களின் தலைமையிடமாக இந்தியா!' - அமெரிக்க அரசு சொல்வது என்ன?
'மனித உரிமை மீறல்களின் தலைமையிடமாக இந்தியா!' - அமெரிக்க அரசு சொல்வது என்ன?

இந்தியாவில் மனித உரிமை பிரச்னைகள் பெருமளவில் இருப்பதாக அமெரிக்கா அரசு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்டதக்க பல்வேறு மனித உரிமை மீறல் பிரச்னைகளுக்கு இந்தியா தலைமையிடமாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கொலைகள், நியாயமற்ற முறையிலான தனிநபர் கொலை, ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல், கருத்து சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல், மத சுதந்திரம் மீதான அச்சுறுத்தல், ஊழல் உள்ளிட்டவை இதற்கான காரணங்களாக, அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள 'மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த 2021' அறிக்கையில், ஜம்மு-காஷ்மீரில் மேம்பட்ட மனித உரிமை நிலைமையைக் குறிப்பிட்டிருந்தது. பெரும்பாலான அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதேபோல "ஜம்மு-காஷ்மீரில் சில பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதன் மூலம் இயல்புநிலையை மீட்டெடுக்க (இந்திய) அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஜனவரி மாதம் தொடக்கத்திலிருந்து ஜம்மு - காஷ்மீரில் இணைய சேவை தொடர்பான கட்டுபாடுகளை நீக்கியது. இருந்தபோதிலும், பெரும்பாலான இடங்களிலும் அதிவேக 4ஜி சேவை என்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் தொகுதிகளை மறுவடிவமைப்பு செய்வதற்கான பணியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான காலக்கெடுவை அறிவிக்கத் தவறிவிட்டது என்றும் அமெரிக்க ஆய்வறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அங்கு டிசம்பரில் நடத்தப்பட்ட மாவட்டத் தேர்தலில், காஷ்மீர் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறைத் துறை அறிக்கையின் பிரதானமாக இந்தியாவில் நடக்கும் 12 முக்கிய மனித உரிமை பிரச்னைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான கொலைகள், காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட சட்டத்துக்கு புறம்பான கொலைகள்; சிறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மனிதாபிமானமற்ற செயல்கள்; சிறைவாசிகளுக்கு கொடூரமான மற்றும் இழிவான சித்ரவதைகள் கொடுப்பது; உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்து சிறை நிலைமைகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் தடுப்புக்காவல் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் பொறுத்தவரை இதுபோன்ற மனித உரிமை அறிக்கைகளின் கூற்றுகளை இந்தியா நிராகரித்தது.

பத்திரிகைகள் மீதான தடைகள் மற்றும் நியாயமற்ற முறையில் கைது செய்யப்படுதல், ஊடகவியலாளர்கள் மீது வழக்குத் தொடுப்பது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான கட்டுப்பாடுகள், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகரித்து வருவதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் சமூக வலைதள பதிவுகளுக்கெல்லாம் குற்றவியல் அவதூறு சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தணிக்கை மற்றும் இணையதளங்கள் முடக்கங்கள் அதிகரித்து வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில், தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளை விமர்சித்து ட்விட்டரில் கருத்தை பதிவு செய்த பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தை அவமதிததாக கூறி, அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதும், அதேபோல உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்த செய்தியை மேற்கோளிட்டு செய்தியை வெளியிட்ட 'தி வயர்' ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதையும் தெளிவாக அந்த அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மேற்கோளிட்ட பிற மனித உரிமைகள் பிரச்னைகளில் அரசு சாரா நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான வரம்புகள், நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் பொதிந்துள்ள பரவலான ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் விசராணைக்கு வரும்போது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாததையும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மதசுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறைகளையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக சிறுபான்மையினரை குறிவைத்து நடக்கும் வன்முறைக் குற்றங்கள், உள்ளிட்டவையும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com