ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியா வர தடை
கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், துருக்கி ஆகிய இடங்களில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு நாளை முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேபோல், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத்தில் இருந்து இந்தியா வருபவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மார்ச் 31-ஆம் தேதி வரை மூட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும், தேவையற்ற பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்தை குறைந்த அளவில் பயன்படுத்துமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான உதவிகளுக்காக, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்வதற்கான எண்களும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.