எகிப்தில் இருந்து இறக்குமதி ஆகிறது வெங்காயம் : மத்திய அரசு நடவடிக்கை
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், எகிப்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நாட்டில் வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்பால் அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விலை உயர்ந்து ஒருகிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாயை வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ 80 ரூபாயிக்கும் விற்பனையாகிறது. திருச்சி வெங்காய மண்டியில் சிறிய வெங்காயம் கிலோ 140 ரூபாய் வரைக்கும் பெரிய வெங்காயம் 110 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மதுரை காய்கறி சந்தையில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கோவை மாவட்டம் மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய விளைச்சல் சிறப்பாக உள்ளதாலும் அங்கு விளையும் வெங்காயம் அதே பகுதிகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதால் கோவை சந்தையில் வெங்காயத்தின் விலை மற்ற நகரங்களைவிட சற்று குறைவாக உள்ளது. அங்கு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் கிலோ 70 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, 6 ஆயிரத்து 90 டன் வெங்காயத்தை எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்து உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ 52 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்ய பொதுத்துறை வர்த்தக நிறுவனமான MMTC நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. டிசம்பர் முதல்வாரத்தில் இந்த வெங்காயம் விற்பனைக்கு வரும் தெரிகிறது.