30 கோடி பயாலஜிக்கல் - இ கோவிட் தடுப்பூசிக்கு ஒப்பந்தம் மேற்கொண்ட மத்திய அரசு!

30 கோடி பயாலஜிக்கல் - இ கோவிட் தடுப்பூசிக்கு ஒப்பந்தம் மேற்கொண்ட மத்திய அரசு!
30 கோடி பயாலஜிக்கல் - இ கோவிட் தடுப்பூசிக்கு ஒப்பந்தம் மேற்கொண்ட மத்திய அரசு!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஐதரபாத்தை மையமாக கொண்டு இயங்கும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பயாலஜிக்கல் – இ நிறுவனத்திடமிருந்து, 30 கோடி தடுப்பூசி வாங்கிக்கொள்வதாக உறுதியளித்துள்ளது. இதற்கு முன்பணமாக, 1500 கோடி செலுத்தப்பட உள்ளது.

இந்த தடுப்பூசியின் டோஸ்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு கையிருப்பில் வைக்கப்படும் பணி, இந்த வருட ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை நடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, தற்போது தனது ஆய்வில் மூன்றாம் கட்ட க்ளினிக்கல் ட்ரையலில் இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் இது அதிலும் வெற்றி பெற்று, விற்பனை சந்தைக்கு வருமென கூறப்படுகிறது.

இதற்கான தொகையை, உள்நாட்டில் நடக்கும் தடுப்பு மருந்து உற்பத்திக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டுக்கும் நிதியுதவி செய்வதன் ஒரு பகுதியாக அரசு வகுத்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசிக்கு பிறகு, இந்தியாவில் தயாரிக்கப்படும் இரண்டாவது தடுப்பு மருந்து, இதுதான்.

இந்த பயாலஜிக்கல் – இ, இந்தியாவை சேர்ந்த மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமென்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் கோவிட் – 19 தடுப்பூசியை வருடத்துக்கு 600 மில்லியன் தயாரித்து தருவதாக கூறி தனியொரு ஒப்பந்தத்தை ஏற்கெனவே போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கனடாவை மையமாக கொண்டு இயங்கும் ப்ராவிடென்ஸ் தெரபிடிக்ஸ் என்ற நிறுவனத்துக்கும் இவர்கள் தடுப்பூசி தயாரித்து கொடுப்பதாக, ஒப்புக்கொண்டுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்திருக்கும் 8 வெவ்வேறு நோய் பாதிப்புகளுக்கான தடுப்பூசிகளை இந்நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா பரவலை தொடர்ந்து, அதற்கான தடுப்பூசி கண்டறியும் பணிக்கு தங்கள் பங்களிப்பை இவர்கள் அளித்தனர். அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் ஹௌட்சனை மையமாக கொண்டு இயங்கும் பேலர் மருத்துவக் கல்லூரியினர் தயாரித்த தடுப்பூசிக்கு காப்புரிமை பெற்று, அதை மேம்படுத்த தொடங்கினர். இவர்கள்தான் தடுப்பூசி ஆய்வு பணியை துரிதப்படுத்தினர். தொடர்ந்து, தாங்களே தயாரிக்கவும் செய்கின்றனர்.

“பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் நடுத்தர வர்க்க நாடுகளுக்கு தங்களின் தடுப்பூசி உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆய்வை தொடங்கினோம்” என பயாலாஜிக்கல் – இ நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் மகிமா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com