\
gold
goldreuters

தங்கம் வாங்கினால் உஷார் ரீனியம் கலப்பட பவுடர் கலக்குறாங்க.. Test-லும் கண்டுபிடிக்க முடியாது!

தங்கத்தில் கலப்படம் செய்தால் கண்டுபிடிக்க முடியாதபடி புது தில்லமுல்லு அறிமுகமாகியுள்ளது.. சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலப்பட பொருளால் தங்கத்தின் தூய்மை பெரும் பாதிப்பை சந்திக்கலாம்.. அதிர்ச்சி அளிக்கும் புது மோசடி தற்போது அம்பலமாகியுள்ளது..
Published on: 

தங்கம் என்பது உலகின் மிக விலை உயர்ந்த உலோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் அளவுக்கு தங்கத்தின் மதிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, தங்கத்தில் கலப்படம் நடைபெறுவதைத் தடுப்பதற்கும், அதன் தூய்மையை உறுதிப்படுத்துவதற்கும் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதன்படி, தங்கத்தை அதிக வெப்பநிலையில் உருக்கி, அதனுடன் கலந்திருக்கும் மற்ற உலோகங்களைப் பிரித்தெடுத்து அதன் தூய்மையைக் கணக்கிடுவது, எக்ஸ்-ரே கதிர்களைச் செலுத்தித் தங்கத்தின் தூய்மையைக் கண்டறிவது, காற்றிலும் நீரிலும் தங்கத்தின் எடையை அளந்து அதன் அடர்த்தியைத் தூய தங்கத்தின் அடர்த்தியுடன் ஒப்பிடுவது எனப் பல்வேறு சோதனை முறைகள் நடைமுறையில் உள்ளன.

இதுமட்டுமின்றி, பி.ஐ.எஸ். ஹால்மார்க், HUID குறியீடு போன்றவை உள்ளதா என்பதை வைத்தும், தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய தேவைகள் உள்ளது. இப்படி பார்த்து பார்த்து தங்கம் வாங்கி வந்த நிலையில், ஒரு புதிய மோசடி ஒன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அதாவது, ராஜஸ்தானில் நடத்தப்பட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், தங்கத்துடன் ரீனியம் பவுடர் கலக்கப்பட்டு தங்க நகைகள் செய்யப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் நகைகளின் எடை அதிகரிப்படுவதோடு, பல சோதனை மையங்களிலும், 22 கேரட்டுக்கான ஹால்மார்க் சான்று கிடைக்கும் அளவுக்கு அவை தூய்மை சோதனைகளில் தேர்ச்சி பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.

ரீனியத்தின் அடர்த்தி தங்கத்திற்க மிக அருகில் இருப்பதால், எடை மற்றும் அடர்த்தி சார்ந்த சாதாரண சோதனைகளில் வித்தியாசம் எதுவும் தெரிவதில்லை என்றும் கூறுப்படுகிறது. ஜோத்பூரில் உள்ள நகைக் கடைக்காரர்கள் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில், 7.83 கிராம் 24 கேரட் தங்கத்துடன் 1 கிராம் ரீனியம் பவுடர் சேர்த்து, மற்ற உலோகங்களுடன் 22 கேரட் நகை உருவாக்கப்பட்டபோது, அது சோதனைக் கருவிகளில் உயர்தூய்மைத் தங்கம் போலவே பதிவானதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சில அறிக்கைகளில் குறிப்பிட்ட விகிதத்தில் கலப்படம் செய்தாலும் சாதாரண சோதனைகளில் சிக்காத நிலை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பவுடர் சீனாவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு, மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள முகவர்கள் மற்றும் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா வழியாகக் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது. ரீனியம் கிராம் அடிப்படையில் தங்கத்தை விடக் குறைவான விலையில் கிடைப்பதால், முழு எடைக்கும் தங்க விலை வசூலித்து மோசடி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது. முறையான GST பில் இல்லாமல் ரொக்கத்திற்கு மட்டுமே வாங்குவதைத் தவிர்த்து, நம்பகமான அங்கீகரிக்கப்பட்ட நகைக் கடைகளில் வாங்குவது பாதுகாப்பானது என்றும், ஏற்கனவே வாங்கிய தங்க நகைகளை உரிய பகுப்பாய்வு முறைகளின் மூலம் பரிசோதித்து, தங்கத்தின் தூய்மையை தெரிந்துக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.