வங்க தேசம் ராணுவத்திற்கு 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கிய இந்தியா!
வங்க தேச ராணுவத்திற்கு இந்திய ராணுவம் சார்பில் கொரோனா தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வங்க தேச ராணுவம் பெற்றுக்கொண்டது.
வங்க தேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, கடந்த மார்ச் 26-ம் தேதி பிரதமர் மோடி வங்காளதேசத்திற்கு சென்று திரும்பினார். இந்நிலையில் வங்கதேச ராணுவத்திற்கு இந்தியா சார்பில் கொரோனா தடுப்பூசிகள் அன்பளிப்பாக நேற்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நாரவனே ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வங்கதேச ராணுவ ஜெனரல் அஜீஸ் அகமதுவிடம் டாக்காவில் வைத்து ஒப்படைத்தார்.
இருநாட்டு ராணுவ ஜெனரல்களும் தங்கள் சந்திப்பின் போது, இந்தியா – வங்கதேசம் நாடுகளின் ராணுவ படைகளுக்கு இடையிலான நல்லுறவுகளை தொடர்வது, எதிர்காலத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்குவது, ராணுவ விமானிகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக விவாதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக கடந்த ஜனவரி மாதத்தில் வங்கதேசத்திற்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.