122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - நாடு தாங்குமா?

122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - நாடு தாங்குமா?
122  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - நாடு தாங்குமா?

இந்தக் கோடைக் காலத்தில் இயல்பு அளவை விட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளதால் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 31ஆம் தேதி வரையில் நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் எனவும், பல மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை உயரும் என்றும் இந்திய வானிலை துறையின் மூத்த விஞ்ஞானி எஸ்.சி. பான் தெரிவித்துள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ல் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்து 23 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 

கோடைகாலத்தில் மின் தேவை உச்சத்தை தொடும் என்பதால் மின் தேவை கடந்த ஆண்டுகளை விட பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டில்  நிலக்கரி தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், கோடையில் மின் பற்றாக்குறையை தவிர்க்க முடியுமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியும் நெருக்கடியும்.

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளராக உள்ள நிலையில், கடும் வெயில் காரணமாக இந்த ஆண்டு கோதுமை உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டில் கோதுமை உற்பத்தி குறைந்ததால், இந்தியா மிகப் பெரிய ஏற்றுமதி வாய்ப்பை இழந்தது. இந்த ஆண்டும் அதே நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

வெப்ப அலை என்றால் என்ன?

வழக்கமான அளவைக் காட்டிலும் வெப்பம் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதே வெப்ப அலை. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வரையறையின்படி, இந்தியாவில் சமவெளிப் பகுதியில் 40 டிகிரி, மலைப்பகுதியில் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டுவது வெப்ப அலை என்ற நிலை ஏற்படுகிறது. சாதாரண வெப்பநிலையிலிருந்து 7 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com