\
India Depends on China for 65% of Pharma Ingredients: NITI Aayog
medicinesx page

65% மருந்து மூலப்பொருள் |சீனாவைச் சார்ந்திருக்கும் இந்தியா.. நிதி ஆயோக் அறிக்கை!

இந்தியாவில் மருந்துத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வணிகச் சூழல் பலவீனமாக உள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது.
Published on

இந்தியா அதன் மருந்துத் தயாரிப்புக்குத் தேவையான 65 சதவீத அத்தியாவசிய மூலப்பொருட்களுக்கு இன்னும் சீனாவையே நம்பியிருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை எச்சரித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான பொதுவான மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் ஆன்டிபயாடிக்குகளுக்குத் தேவையான API மூலப்பொருள் மற்றும் மருந்து தயாரிப்பைத் தொடங்குவதற்கான முக்கியப் பொருட்கள் மற்றும் இடைநிலை இரசாயனங்கள் ஆகியவற்றில் 65 சதவீதத்திற்கும் அதிகமான தேவையை இந்தியா இன்னமும் சீன இறக்குமதி மூலமாகவே நிறைவு செய்கிறது. குறிப்பாக, நொதித்தல் அடிப்படையிலான மருந்துப் பொருட்களுக்கு சீனாவையே முழுமையாக நம்பியிருக்க வேண்டியுள்ளது. சில குறிப்பிட்ட டாப் 5 ஏபிஐ வகைகளில் சீனாவின் ஆதிக்கம் 66% முதல் 86% வரை நீடிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள நிதி ஆயோக் அறிக்கை, இந்தியாவில் மருந்துத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வணிகச் சூழல் பலவீனமாக உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்திய அரசு இந்தச் சார்பைக் குறைக்க ஏற்கெனவே PLI திட்டத்தின்கீழ் உள்நாட்டிலேயே பல்க் டிரக் பூங்காக்களை அமைத்து 56,800 மெட்ரிக் டன் உற்பத்தித் திறனை உருவாக்கியிருந்தாலும், சீனாவின் மிகக் குறைந்த விலை மற்றும் பிரம்மாண்ட உற்பத்தித் திறனுடன் போட்டியிட்டு முழுமையான சுயசார்பை அடைய இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும் என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. மேலும், ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு மலிவு விலை மருந்துகளை வழங்கும் முக்கிய நாடாக இந்தியா இருந்தாலும், மருந்தியல் துறையில் அதிக மதிப்புடைய பிரிவுகளில் கவனம் செலுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் நிதி ஆயோக் துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com