அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பெயரை மாற்றிய சீனா.. இந்த முறை 11 இடங்களுக்கு! இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

இந்திய எல்லையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க மத்திய அரசும் கடும் எதிர்ப்பு நிலைப்பாட்டை தெரிவித்து வருகிறது. இது உள்நாட்டு அரசியலிலும் தொடர்ந்து எதிரொலித்த வண்ணமே உள்ளது.
Arunachal Pradesh
Arunachal PradeshThe Federal

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாக உள்ள அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில் சீனா ஊடுருவி, இந்திய பகுதியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் வடகிழக்கு எல்லையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இந்திய அரசாங்கம் பாதுகாப்புக்காக குவித்து வைத்திருக்கிறது.

முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீனர்களுக்கும் இடையேயான இருதரப்பு தாக்குதலில் 4 சீனர்கள் மற்றும் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்திய எல்லையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க மத்திய அரசும் கடும் எதிர்ப்பு நிலைப்பாட்டை தெரிவித்து வருகிறது. இது உள்நாட்டு அரசியலிலும் தொடர்ந்து எதிரொலித்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் விதமாக சீனாவின் சிவில் விவகாரத்துறை அமைச்சகம், அருணாச்சல பிரதேசத்தில் உள்ல 11 இடங்களுக்கு சீன, திபெத்திய மற்றும் பின்யின் எழுத்துகளை கொண்ட புதிய பெயர்களை வைத்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

குறிப்பிட்ட அந்த 11 இடங்களும் தென் திபெத்தின் ஜங்னான் பகுதி என சீனாவால் அழைக்கப்படுகிறதாம். இந்த பெயர் மாற்ற அறிவிப்பு சீனாவின் மாநில கவுன்சில் மற்றும் அமைச்சரவை வழங்கிய புவியியர் சார்ந்த விதிகளின் படியே வெளியிடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவால் புதிதாக பெயரிடப்பட்டுள்ள அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளில் இரு நிலப்பகுதிகள், ஐந்து மலைச்சிகரங்கள், இரு ஆறுகள் மற்றும் இரு குடியிருப்புப் பகுதிகள் உள்ளதால் இதற்கான நிர்வாக அமைப்புகளையும் வகுத்திருப்பதாக சீன அரசின் குளோபல் டைம்ஸ் செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பெயர் மாற்றம் செய்வது முதல் முறையல்ல..!

அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளுக்கு இப்படியாக பெயரை மாற்றி அறிவிப்பது சீனாவுக்கு முதன் முறையல்ல. இது மூன்றாவது முறையென சொல்லப்படுகிறது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு முதன் முதலில் 6 இடங்களின் பெயர்களை மாற்றி வெளியிட்ட சீனா, அதற்கடுத்தபடியாக 2021ம் ஆண்டு 15 இடங்களுக்கு புதிய பெயரிட்டு அதற்கான வரைபடங்களையும் வெளியிட்டது.

இது தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் பேசியிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “அருணாச்சல பிரதேச பகுதிகளின் பெயரை சீனா மாற்றுவது இது முதல் முறையல்ல.

இருப்பினும் அருணாச்சல பிரதேசம் எப்போது இந்தியாவுடன்தான் இருக்கிறது. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே. புதிதாக பெயரை வைப்பதால் உண்மைத்தன்மையை மாற்றிட முடியாது.” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை அவர் இன்றைய தினமும் உறுதிபடுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், “சீனா இதுபோன்ற முயற்சியை மேற்கொள்வது இது முதல் முறை அல்ல. சீனாவின் இந்த நடவடிக்கையை, முழுவதுமாக நிராகரிக்கிறோம். அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் எப்போதும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும். இதுபோன்ற முயற்சிகள், யதார்த்தத்தை மாற்றாது"

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com