ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் அடிப்படையில் இந்தியாவை ஆள முடியாது: ஒவைசி
ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் என்ற அடிப்படையில் இந்தியாவை ஆள முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதின் ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உத்திர பிரதேசத்தின் அலிகார் நகராட்சி ஆணையராக பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்கும் போது, உருது மொழியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் இறுதியில் கைகலப்பில் முடிந்தது.
இந்தச் சம்பவத்தை குறித்து ஏஐஎம்ஐஎம் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதின் ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், ஒரு நாடாளுமனற உறுப்பினராக நான் மூன்று முறை உருது மொழியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். வரும் 2019 ஆம் ஆண்டும் உருது மொழியில்தான் உறுதிமொழி எடுத்துக் கொள்ள உள்ளேன். இது அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானதா? ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் என்ற அடிப்படையில் இந்தியாவை யாரும் ஆள முடியாது என்று பதிவிட்டுள்ளார்.