இந்தியா - பாகிஸ்தான் போட்டி : சீருடையால் கவனத்தைக் கவர்ந்த தம்பதி
இந்தியா-பாகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியைக் காண வந்திருந்த ஒரு தம்பதியின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கனடாவில் வசித்துவரும் இத்தம்பதியினரில் கணவன் பாகிஸ்தானையும், மனைவி இந்தியாவையும் சேர்ந்தவர் ஆவர். இருநாட்டு கிரிக்கெட் வீரர்களின் சீருடைகளை இணைத்து புதுவிதமாக வடிவமைக்கப்பட்டிருந்த உடையை அவர்கள் இருவரும் அணிந்து வந்திருந்தார்கள்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை ஒரு போர் போல் கருதி பெரும்பாலான ரசிகர்கள் பார்த்து வரும் நிலையில், இந்தத் தம்பதி உடுத்தியிருந்த உடை இரு நாடுகளிடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்ததாக கிரிக்கெட் நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
அதேபோல், இந்தத் தம்பதிகளின் படத்தை பதிவிட்டு பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இரு நாடுகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அன்பை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாக நெகிழ்ச்சியாக பலரும் கூறியுள்ளனர். வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் போட்டியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என சிலர் கூறியுள்ளனர்.
இதற்கு முன்பாக வெஸ்ட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலும் ஒரு பாதி இந்தியா - மறுபாதி பாகிஸ்தான் அணியின் நிறத்துடன் உள்ள ஆடையை அணிந்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.
அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.