“பாகிஸ்தானுக்கு நிதியளிப்பதை நிறுத்துங்கள்” - ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இந்தியா கோரிக்கை?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுகிறது. தவிர, இருதரப்பிலும் மாறிமாறி கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதன்படி சமீபத்தில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து அஞ்சல்கள் மற்றும் பார்சல்களின் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்துமாறு ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது ஏடிஐ-யிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விஷயத்தை ஆசிய வளர்ச்சி வங்கித் தலைவர் மசாடோ காண்டாவிடம் எடுத்துச் சென்றதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆசிய வளர்ச்சி வங்கியின் 58வது வருடாந்திர கூட்டத்திற்காக இத்தாலிக்குச் சென்றுள்ள அமைச்சர், ஏற்கெனவே அந்நாட்டுப் பிரதிநிதியுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளதாகவும், பல ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் நிறப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்க்க வேண்டும் என்றும், இஸ்லாமாபாத்திற்கு பலதரப்பு நிதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்துவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
சாம்பல் நிறப் பட்டியலில் பெயரிடப்பட்ட நாடுகள் அதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இது அங்குள்ள வெளிநாட்டு முதலீடுகளைப் பாதிக்கிறது. இது அவர்களின் நிதி அணுகலையும் கட்டுப்படுத்துகிறது.