தேசிய விலங்காக புலிகள் அறிவிக்கப்பட்ட நாள் இன்று!

தேசிய விலங்காக புலிகள் அறிவிக்கப்பட்ட நாள் இன்று!
தேசிய விலங்காக புலிகள் அறிவிக்கப்பட்ட நாள் இன்று!

இந்தியாவில் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. புலிகளை காக்க இந்தியா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை  ஏற்படுத்தி வருகிறது. இதற்காகக்தான் 1973 ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி, புலியை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவித்தது.

அழகும், கம்பீரமும் அதன் உறுமலும்தான் புலிக்கு இந்திய தேசிய விலங்கு என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. 1973 ஆம் ஆண்டு வங்காளப் புலி (பெங்கால் டைகர்) இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் பல்வேறு காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை வெகுவேகமாக குறையத் தொடங்கியது. இதனால், புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி `சர்வதேச புலிகள் தினமாக’ கொண்டாடப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடந்து வருகின்றது. 2006 ஆம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின் முடிவில் இந்தியக் காடுகளில் 1,411 புலிகள் உள்ளதாகவும், 2010 ஆண்டில் 1,706 புலிகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நடந்த புலிகள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 2,226 புலிகள் இருப்பதாக அறியப்பட்டு இருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது.

அதுவும் 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்து. 2018 புலிகள் கணக்கெடுப்புக்காக 1,21,337 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட வனப்பகுதிகளில் 26,838 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. வன உயிரினங்களின் நடமாட்டத்தை அறிந்து அந்த கேமராக்கள் படம்பிடித்தன. அந்த கேமராக்களில் மொத்தம் 3,48,58,623 படங்கள் பதிவாகியிருந்தன. அந்த படங்களைக் கொண்டு அதிநவீன மென்பொருள் மூலமாக மொத்த புலிகளின் எண்ணிக்கை துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாக கணடறியப்பட்டுள்ளது.

இதில் மத்தியப் பிரதேசம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. மத்தியப் பிரதேச காடுகளில் மட்டும் 526 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 இல் மத்திய பிரதேசத்தில் 308 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 526 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அதிக புலிகள் வாழும் இரண்டாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது. இங்கு 524 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதற்கடுத்தப்படியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் 442 புலிகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 312 புலிகளும் வசிக்கின்றன. இந்தப் பட்டியிலில் தமிழகத்துக்கு 5 ஆம் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 264 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கோவா, கர்நாடகம்,கேரளம், தமிழகம் அடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் 981 புலிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் தொடர்ந்து புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியான விஷயம் என சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 2006 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை , 2010 இல் 163 ஆகவும், 2014 இல் 229 ஆகவும் உயர்ந்தது. தற்போது தமிழகத்தில் 264 ஆக புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என நான்கு புலிகள் காப்பகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com