1% பேரிடம் குவிந்துள்ள 40% செல்வம்.. இந்தியாவில் தீவிர பொருளாதார ஏற்றத்தாழ்வு!
உலகில் மிகத் தீவிரமாக ஏற்றத்தாழ்வு நிலவும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வு குறித்து விரிவாக சுட்டிக்காட்டுகிறது உலக ஏற்றழ்த்தாழ்வு ஆய்வறிக்கை.
உலகில் மிகத் தீவிரமாக ஏற்றத்தாழ்வு நிலவும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வு குறித்து விரிவாக சுட்டிக்காட்டுகிறது உலக ஏற்றழ்த்தாழ்வு ஆய்வறிக்கை. தாமஸ் பிக்கெட்டி உள்ளிட்ட சர்வதேச பொருளாதார வல்லுநர்கள்உருவாக்கியுள்ள உலக சமத்துவமின்மை ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் மொத்த செல்வத்தில் 65 சதவீதம், பொருளாதாரரீதியாக மேல்நிலையில் உள்ள 10 சதவீதம் பேரிடம் குவிந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதம் பேரிடமே 40 சதவீத செல்வம் குவிந்துள்ளது. கீழ் அடுக்கில் உள்ள 50 சதவீதம் மக்களிடம் வெறும் 6.4 சதவீத சொத்துகளே உள்ளன.
வருவாயை எடுத்துக்கொண்டால், நாட்டின் மொத்த வருமானத்தில் 58 சதவீதம், மேல்நிலையில் உள்ள 10 சதவீதம் பேரிடமே செல்கிறது. கீழ் அடுக்கில் உள்ள 50 சதவீத மக்களுக்கு வெறும் 15 சதவீத வருமானமே சென்று சேர்கிறது. 2014 முதல் வருவாய் ஏற்றத்தாழ்வு குறையவே இல்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, பாலின ரீதியாகவும் இந்தியாவில் தீவிர ஏற்றத்தாழ்வு நிலவுவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆண்கள்1 மணி நேரத்துக்கு பெறும் ஊதியத்தில்,வெறும் 61 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு கிடைக்கிறது. அதேபோல் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பு மிக குறைவான அளவிலேயே உள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் இதில் எந்த மேம்பாடும் ஏற்படவில்லை என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சமத்துவமின்மை என்பது வளர்ச்சிக்கு ஆபத்தானது என்றும் அரசு கொள்கைகள் மூலம் இதைக் குறைக்கதீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது இந்தஅறிக்கை.

