AIMPLB to challenge Waqf Bill in court
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா pt

மக்களவையில் வக்ஃப் மசோதா.. I-N-D-I-A கூட்டணி கடும் எதிர்ப்பு! அமித்ஷா பேசியது என்ன?

காங்கிரஸ் கட்சியின் கௌரவ் கோகோய் மற்றும் கே சி வேணுகோபால் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Published on

I-n-d-i-a கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கிடையே, வக்ஃப் சட்டத்தில் திருத்தங்களை செய்யும் மசோதாவை மக்களவையிலே நிறைவேற்றும் முயற்சியில் புதன்கிழமை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வக்ஃப் சொத்துக்கள் மூலம் கிட்டும் வருமானம் சரியான முறையில் இஸ்லாமிய குழந்தைகள், மகளிர் மற்றும் எளியோருக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவே சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன என சிறுபான்மையினர் துறை அமைச்சர் கிரண் ரிஜீஜு பேசினார்.

அதே சமயத்தில் ஆதாரம் இன்றி சொத்துக்களை வக்ஃப் என அறிவிக்கப்படுவதாக புகார்கள் வந்த வருடம் உள்ளன எனவும் நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள நிலம் கூட வக்ஃப் சொத்து என உரிமம் கொண்டாடப்படுகிறது என அவர் மக்களவையில் குறிப்பிட்டார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாpt

சரியான முறையில் வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்து அந்த சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்லாமிய குழந்தைகள் மகளிர் மற்றும் எளியோருக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவே சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது என கிரண் ரிஜீஜு குறிப்பிட்டார். ஜெகதம்பா பால் தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார். வக்ஃப் சொத்துக்கள் சரியாக நிர்வகிக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்லாமிய எளியோருக்கு பலன் அளிக்கும் எனவும் தேசத்தின் தலைவிதையே மாறும் எனவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜீஜு பேசினார்.

வக்ஃப் விவகாரங்களில் அதிகாரிகளின் தலையீடு இருக்காது எனவும் வக்ஃப் வாரியங்களில் நடவடிக்கைகளை மட்டுமே அதிகாரிகள் மேலாண்மை செய்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் பேசினார். வக்ஃப் சொத்துக்களை மேலாண்மை செய்வதில் குளறுபடிகள் உள்ளதால் சரியான வருமானம் கட்டாமல் போகிறது எனவும் வக்ஃப் சொத்துக்களை வாடகைக்கு விடுவதில் ஊழல் செய்யப்படுகிறது என புகார்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒருவர் தன்னுடைய சொத்தை மட்டுமே வக்ஃப் என நன்கொடை அளிக்க முடியும் எனவும் பிறர் சொத்தை நன்கொடையாக அளிக்க முடியாது எனவும் அமித் ஷா பேசினார். தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூரை கிராமத்தை அவர் உதாரணமாக குறிப்பிட்டு, 4000 ஏக்கர் நிலம் வக்ஃப் சொத்து என அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். பாஜக மக்களவை உறுப்பினர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரும் திருச்செந்தூரை கிராமத்தை உதாரணமாக குறிப்பிட்டனர்.

 அமித் ஷா
அமித் ஷாFile image

காங்கிரஸ் கட்சியின் கௌரவ் கோகோய் மற்றும் கே சி வேணுகோபால் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது எனவும் அரசு வக்ஃப் விவகாரங்களில் குளறுபடி நடப்பதாக இன்பத்தை உருவாக்குவதாகவும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நான் ஒவ்வொரு வருடமும் சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு செல்கிறேன் எனவும் மாத மதம் குருவாயூரப்பன் ஆலயம் செல்கிறேன் எனவும் கேசி வேணுகோபால் குறிப்பிட்டார். நான் எனது மதத்தை பின்பற்றுகிறேன் என்கிற அதே சமயத்தில் மத நல்லிணக்கத்தை விரும்புகிறேன் என கே சி வேணுகோபால் மக்களவையில் பேசினார்.

மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் வக்ஃப் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. தெலுங்கு தேசம் கட்சியின் கிருஷ்ணா பிரசாத் தனது கட்சி வக்ஃப் மசோதாவில் இஸ்லாமியருக்கு பயனளிக்கும் பல்வேறு திருத்தங்களுக்கு காரணமாக இருந்தது என குறிப்பிட்டார். இஸ்லாமியர் நலனை காக்க மாநில அரசுகளுக்கு வக்ஃப் வாரியங்களை நிர்வாகம் செய்ய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பாக பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் வக்ஃப் சொத்துக்களை சூறையாடுபவர்களை தடுக்கவே சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது என குறிப்பிட்டார். பிஹார் மாநிலத்தில் நிதீஷ் குமார் எப்படி மதச்சார்பற்ற முறையில் வளர்ச்சிக்கு பாடுபடுகிறாரோ அதேபோல பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மதச்சார்பற்ற முறையில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார் என ராஜீவ் ரஞ்சன் சிங் குறிப்பிட்டார்.

ஆ. ராசா
ஆ. ராசாகோப்புப் படம்

திமுக சார்பாக மசோதாவுக்கு ஆ ராசா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் மக்களவையில் பேசினார். தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்து, வக்ஃப் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என ஆ ராசா குறிப்பிட்டார்.

சிவ சேனா உத்தவ் தாக்கரே பிரிவு மசோதாவுக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிவ சேனா ஷிண்டே பிரிவு மசோதாவுக்கு ஆதரவளித்தது. சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உயிருடன் இருந்தால் சிவா சேனா உத்தவ் தாக்கரே பிரிவு இந்த மசோதாவை எதிர்த்திருக்காது என ஸ்ரீகாந்த் ஷிண்டே மக்களவையில் பேசினார். சத்ரபதி சிவாஜியை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் மற்றும் மன்னர் சாம்பாஜியை கொடூரமாக கொலை செய்பவர்களுக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே பிரிவு செயல்படுவதாக ஸ்ரீகாந்த் ஷிண்டே விமர்சனம் செய்தார்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்எக்ஸ் தளம்

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சி மக்களவையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதாவை நாங்கள் திட்டவட்டமாக எதிர்க்கிறோம் என ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் மிதுன் ரெட்டி பேசினார்.

சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி ஆகியோர் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். வக்ஃப் மசோதா வியாழக்கிழமை மாநிலங்களவையில் விவாதத்துக்கு வரும் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். -- புது தில்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com