டெல்லியில் கூடும் I.N.D.I.A. எடுக்கப்போகும் முடிவுகள் என்னென்ன?

தேசிய அளவில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள I.N.D.I.A. கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதில் கூட்டணியின் பரப்புரை யுக்தி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் டெல்லி இல்லத்தில் I.N.D.I.A. கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூடுகிறது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கொள்கை, தேசிய - மாநில அளவில் முன்னெடுக்க உள்ள செயல் திட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய விஷன் டாக்குமென்ட் எனப்படும் தொலைநோக்கு அறிக்கையை தயாரிப்பது குறித்து விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

கோப்புப்படம் - 'INDIA' கூட்டணி
கோப்புப்படம் - 'INDIA' கூட்டணி புதிய தலைமுறை

இந்தக் குழு தயாரிக்கும் இந்த அறிக்கையானது மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை முன்வைப்பது இக்கூட்டத்தின் நோக்கமாக இருக்குமென கூறப்படுகிறது. இதேபோல வெறுப்பு விருப்பற்ற வகையில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையிலான வளர்ச்சி குறித்த I.N.D.I.A. கூட்டணியின் திட்டங்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து திட்டத்தையும் இந்த கூட்டணி வகுக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிப் பங்கீடை எவ்வாறு மேற்கொள்வது என்ற ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் மட்டும் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com