
உத்தரப்பிரதேச மாநிலம் பேர்லி நகரத்தைச் சேர்ந்தவர் பிரபல யூட்யூபர் தஸ்லிம். இவர் “டிரேடிங் ஹப் 3.0” என்றப் பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த யூட்யூப் தளத்தில் டிரேடிங் சம்பந்தமான வீடியோக்களை அவர் பதிவிட்டு வரும் நிலையில், அந்த வீடியோக்கள் மூலமாக ரூ. 1 கோடி வரையில் சம்பாதித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு முறையாக வரி கட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, யூட்யூபர் தஸ்லிம் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.
ஆனால், தஸ்லிம் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் வைத்துள்ள குற்றச்சாட்டை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதுகுறித்து அவரது சகோதரர் ஃபெரோஸ் கூறியுள்ளதாவது, “யூட்யூப் மூலம் கிடைத்த மொத்த வருமானம் ரூ.1.2 கோடி. அதற்கு ரூ. 4 லட்சம் ஏற்கெனவே வரி செலுத்திவிட்டோம். வருமான வரித்துறையினர் நடத்தும் இந்த சோதனை திட்டமிட்ட சதி” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தஸ்லிமின் தாய் தெரிவித்துள்ளதாவது, “பங்குச் சந்தை தொடர்பான வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை பெற்று வருமானவரியை முறையாக செலுத்தி வருகின்றோம். யூட்யூபின் மூலம் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தோம் என்பது தவறான செய்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தஸ்லிம் வீட்டில் நடத்திய இந்த சோதனையில், ரூ.24 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் பிரபல யூட்யூபர்கள் தங்களது யூட்யூப் சேனல்களில் கிடைக்கும் வருமானத்தை (ரூ.25 கோடி) வரி ஏய்ப்பு செய்ததாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்திய நிலையில், தற்போது உத்தரப்பிரதேசத்தில் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.