27 வருடங்கள்; எத்தனை வன்முறை.. எத்தனை எதிர்ப்பு? மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்துவந்த பாதை-முழுவிபரம்

சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி, முஸ்லிம் லீக் மற்றும் ஜனதாதளம் கட்சி பல்வேறு காலகட்டங்களில் தங்களுடைய கடுமையான எதிர்ப்பு காரணமாக மகளிர் இடஒதுக்கீட்டை இதுவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா
மகளிர் இடஒதுக்கீடு மசோதாpt web
Published on

கனவாகவே இருந்த இடஒதுக்கீடு

சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி, முஸ்லிம் லீக் மற்றும் ஜனதாதளம் கட்சி பல்வேறு காலகட்டங்களில் தங்களுடைய கடுமையான எதிர்ப்பு காரணமாக மகளிர் இடஒதுக்கீட்டை இதுவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். மக்களவை மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கீடு செய்யும் அதே நேரத்தில், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் உள்-ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பல கட்டங்களில் நாடாளுமன்றத்தில் பல அத்துமீறல்களில் இந்த கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த 27 வருடங்களாக மகளிர் இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறமுடியாமல் கனவாகவே இருந்து வருகிறது.

மத்திய அமைச்சர் சரத் யாதவ்
மத்திய அமைச்சர் சரத் யாதவ்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் முதல் தற்போதைய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வரை பல்வேறு தலைவர்கள் மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்களுக்குள் அடக்கம். நிதீஷ் குமார் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றி நிபந்தனைகளுடன் மகளிர் இடஒதுக்கீட்டை அனுமதிக்கலாம் என தெரிவித்த நிலையில், நாடாளுமன்றத்தில் இந்த முக்கிய முடிவுக்கு தற்போது எதிர்ப்பு மிகக் குறைவு என்பது நிதர்சனம்.

கிழிக்கப்பட்ட மசோதா

1996 ஆம் வருடம் தேவ கவுடா அரசு மகளிருக்கு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டுக்காக மசோதாவை தாக்கல் செய்தது. அதற்கு அடுத்த வருடம் அந்த மசோதா விவாதத்துக்கு வந்த போது அப்போது ஜனதாதளம் கட்சியில் ஆளும் கூட்டணியில் அங்கமாக இருந்த சரத் யாதவ் இந்த மசோதாவை எதிர்த்து, ஓபிசி உள்ஒதுக்கீடு இல்லாமல் மசோதாவை ஏற்றுக் கொள்ள முடியாது என தடுத்து நிறுத்தினார்.

சுரேந்தர் பிரசாத் யாதவ்
சுரேந்தர் பிரசாத் யாதவ்

பின்னர் வாஜ்பாய் அரசு ஆட்சி செய்த போது 1998 ஆம் வருடம் அப்போது சட்ட அமைச்சராக இருந்த தம்பிதுரை மீண்டும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய முற்பட்டார். சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தம்பிதுரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போது, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சுரேந்தர் பிரசாத் யாதவ் அப்போதைய மக்களவை சபாநாயகர் பாலயோகி கையில் இருந்த மசோதாவை பிடிங்கி கிழித்து எறிந்தார்.

முற்பட்ட சமுதாயப் பெண்களே பயனடைவார்கள்

ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு உள்-ஒதுக்கீடு இல்லாமல் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் அதன் பலனை முற்பட்ட சமுதாயங்களை சேர்ந்த பெண்களே கவர்ந்து செல்வார்கள் என்பது சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் வாதமாக இருந்தது. இதே காரணத்தை சுட்டிக்காட்டி பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்த்து வந்தன.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

சமாஜ்வாதி கட்சி தலைமையில் செயல்பட்டு வந்த லோக் ஜனசக்தி மோர்சா உள்ளிட்ட கூட்டணிகளின் ஆதிக்கம் வலுவாக இருந்ததால் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒப்புதலை பெற முடியாத சூழல் நிலவியது. 2004 ஆம் வருட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அமைச்சரான லாலு பிரசாத் யாதவ் வெளிப்படையாக மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்து வந்தார்.

சட்ட அமைச்சர் மீது தாக்குதல்

2008 ஆம் வருடத்தில் அப்போதைய சட்ட அமைச்சர் ஹான்ஸ் ராஜ் பரத்வாஜ் மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ய முயற்சி செய்தபோது சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை தாக்க முற்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரை சுற்றி நின்று அவரை காத்தனர் என்ற போதிலும், அபு ஆஸ்மி உள்ளிட்ட சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவணங்களை கிழித்து எறிந்தனர். இப்படி பலமுறை இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனர்.

2010 ஆம் வருடத்தில் மன்மோகன் சிங் அரசு இந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்த போதும் வன்முறை வெடித்தது. சமாஜ்வாதி கட்சியின் நந்து கிஷோர் யாதவ் மற்றும் கமல் அக்தர் மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி மேஜையின் மேல் ஏறி ஒலிபெருக்கியை உடைத்து எறிந்தனர். அதேசமயம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ராஜ் நிதி பிரசாத் மசோதாவின் நகலை கிழித்து அவை தலைவர் மீது எறிந்தார். இருந்த போதிலும் அடுத்த நாள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவு அளித்ததால் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

தற்போது 27 வருட தாமதத்திற்கு பிறகு பெரும்பாலான கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம் ஆனால் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதையும் தெளிவுபடுத்துவோம் என பேசியுள்ளதே தற்போதைய சூழல் எந்த அளவுக்கு மாறி உள்ளது என்பதை காட்டும் விதமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com