நாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..!

நாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..!
நாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..!

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களின் தகவல்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூரை தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 8,026 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் தபால் வாக்குகள் உட்பட நாடு முழுவதும் 67.4% வாக்குகள் பதிவாகின. இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களிலேயே இதுதான் அதிகமாக பதிவான வாக்கு சதவிகிதம் ஆகும்.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர்கள் தவிர்த்து, தோல்வியடைந்த 7,484 வேட்பாளர்களில் வெறும் 587 வேட்பாளர்களே டெபாசிட் பெற்றுள்ளனர். கட்சிகள் வாரியாக பார்க்கும்போது பகுஜன் சமாஜ்வாதி கட்சி போட்டியிட்ட 383 தொகுதிகளில் 345 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. காங்கிரஸ் போட்டியிட்ட 421 தொகுதிகளில் 148 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 69 இடங்களில் 51 இடங்களிலும் டெபாசிட் பறிபோய் உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 49ல் 41 இடங்களிலும், தேசிய காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 34ல் 14 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 62 தொகுதிகளில் 20 இடங்களிலும் டெபாசிட் தொகையை இழந்துள்ளன. 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள பாஜக 51 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. 

வாக்குகள் அடிப்படையில் பாஜக 37.78%, காங்கிரஸ் 19.7%, திரிணாமுல் காங்கிரஸ் 4.11%, பகுஜன் சமாஜ்வாதி கட்சி 3.67%, சிபிஎம் 1.77%, தேசிய காங்கிரஸ் கட்சி 1.4%, சிபிஐ 0.59% வாக்குகள் பெற்றுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட மொத்த 17 மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவு வாக்களித்துள்ளனர். இதில் பிகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களும் அடங்கும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக பதிவான வாக்குகளில் லட்சத்தீவில் அதிகபட்சமாக 85.21% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக நாகலாந்தில் 83% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்களாத்தில் 81.76% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவிலேயே குறைந்த பட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 44.97% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் முறையே 57.35% மற்றும் 59.21% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. தொகுதிகள் அடிப்படையில் இந்தியாவிலேயே அசாம் மாநிலத்தின் துப்ரி தொகுதியில் அதிகபட்சமாக 90.66% வாக்குகளும், குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீரின் அனந்நாக் தொகுதியில் 8.98% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்திய அளவில் பதிவான 28 லட்சம் தபால் வாக்குகளில் 22.8 லட்சம் வாக்குகள் தகுதி பெற்றன. 5 லட்சத்திற்கு மேலான தபால் வாக்குகள் செல்லாத ஓட்டுகளாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

(Courtesy : Times Of India)

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com