கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் அதிகரிப்பு

கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் அதிகரிப்பு

கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் அதிகரிப்பு

இந்தியாவில், கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஆயிரத்து 200 ரூபாய்க்கும் தடுப்பூசி விற்பகப்படும் என அதை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சம் தொட்டும் வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டு வருகின்றன. இதில் கோவாக்சின் மருந்தை, ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. கோவாக்சின் மருந்து, இதுவரை மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான விலையை, பாரத் பயோடெக் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் கிருஷ்ணா எம் எல்லா அறிவித்துள்ளார்.

மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 1,200 ரூபாய்க்கும் ஒரு டோஸ் மருந்து விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் உற்பத்தி செய்யும் மொத்த மருந்துகளில் 50 விழுக்காட்டை மத்திய அரசுக்கு வழங்குவோம் என கூறியுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் அதற்கான விலை குறித்து ஏதும் கூறவில்லை.

அதேநேரத்தில் தற்போது வரை ஒரு டோஸ் மருந்தை 150 ரூபாய்க்கு மத்திய அரசுக்கு வழங்கி வருவதாகவும், அதை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருவதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது. மூக்குவழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கும், சிக்கன்குனியா, ஜிகா, காலரா உள்ளிட்ட பிற நோய்களுக்கான தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கும், கோவாக்சின் விலை உயர்வு அவசியம் என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com