மகளிர் இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தில் 128-வது முறையாக திருத்தம் செய்யப்பட்ட மசோதாவானது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் 33 சதவீத இடஒதுக்கீட்டில், மூன்றில் ஒரு பங்கு பட்டியலினங்களை சேர்ந்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மகளிருக்கு தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். அதாவது பட்டியலின, பழங்குடியின இடஒதுக்கீடுபோல அல்லாமல் மகளிருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் தேர்தலுக்கு தேர்தல் வேறுபடும். இப்போது நடைமுறையில் உள்ள பட்டியலின, பழங்குடியின தொகுதி ஒதுக்கீடுகள் மகளிர் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்த பிறகு மகளிருக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வரும் , மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி 2026 ஆம் வருடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி நடைபெற உள்ளது. ஆகவே 2024 மக்களவை தேர்தலுக்கு முன் மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு அமலுக்கு வர வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, மாநில சட்டசபைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும். மொத்தமுள்ள சட்டசபைகளில் குறைந்தபட்சம் 50% சட்டசபைகள் இந்த இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்த பிறகுதான் சட்டம் அமலுக்கு வரும் நிலையானது இருக்கின்றது.