பஞ்சசீலக் கொள்கையின் முக்கியத்துவமும்..., சீனாவின் அத்துமீறலால் நிகழ்ந்த போரும்...!
ஆங்கிலேய ஆட்சியின் கீழ் சிக்கித் தவித்த இந்தியா., 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரக் காற்றை சுவாசித்தது. அந்த நாள் முதல் 1964, மே 27ல் தன் உயிர் பிரியும் வரை ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். இவர் காலத்தில் அதாவது 1952,1957,1962 ஆகிய ஆண்டுகளில் மூன்று பொதுத் தேர்தல்கள்களை இந்தியா சந்தித்தது.
மூன்றிலும் அதிக பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தது. பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த நேரு இந்திய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய முடிவுகளை எடுத்தார். மற்ற நாடுகளுடனான இந்தியாவின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதில் நேருவுக்கு தனித்த தொலைநோக்குப் பார்வை இருந்தது. அதனை கவனத்தில் கொண்டே பஞ்சசீலக் கொள்கையினை அவர் உருவாக்கினார். 1954இல் சீனாவுடன் பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 1955ஆம் ஆண்டு ஆசிய ஆப்ரிக்க நாடுகள் அணி திரண்ட பாண்டுங் மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கை ஏற்றுக்கொள்ளப் பட்டது. அப்போது சீன பிரதமராக இருந்தவர் சூ என் லாய். இந்தியாவிற்கு வருகை தந்த முதல் சீனப் பிரதமரும் அவரே.
பஞ்சசீலக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்...!
1) எல்லா நாடுகளும் சமாதான சுக வாழ்வு வாழ வேண்டும்.
2) வலிமை மிக்க நாடுகள் வலிமை குறைந்த நாடுகளைத் துன்புறுத்தக் கூடாது.
3)எந்த நாடும் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது.
4) தேவையுள்ள அனைத்து நாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வர வேண்டும்.
5) அனைத்து நாடுகளின் எல்லைப் பாதுகாப்பிற்கும் மரியாதை அளிக்க வேண்டும்.
ஆனால் 1962இல் பஞ்சசீலக் கொள்கையினை காற்றில் பறக்க விட்டது சீனா. இந்தியாவின் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்து சர்வதேச விதிகளை மீறியது அந்நாடு. அதுவே இந்திய சீன யுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் எல்லையில் யுத்த மேகம் சூழ்ந்துள்ளது.

