பதஞ்சலி மருந்து கொரோனாவை தடுக்கும்என்றால் தடுப்பூசி எதற்கு?: இந்திய மருத்துவ சங்கம் கேள்வி

பதஞ்சலி மருந்து கொரோனாவை தடுக்கும்என்றால் தடுப்பூசி எதற்கு?: இந்திய மருத்துவ சங்கம் கேள்வி
பதஞ்சலி மருந்து கொரோனாவை தடுக்கும்என்றால் தடுப்பூசி எதற்கு?: இந்திய மருத்துவ சங்கம் கேள்வி

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்து அறிமுக விழாவில், கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு இந்திய மருத்துவ சங்கம் சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளது. 

யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிரான 'கொரோனில்' என்ற மருந்தை அறிமுகம் செய்தது. இந்த மருந்து அறிவியல் பூர்வமாகச் சோதனை செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், அறிவியல் ஆதாரங்களை எதையும் பதஞ்சலி நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 19-ம் தேதி பதஞ்சலி நிறுவனம், 'கொரோனில் கிட்' என்ற பெயரில் கொரோனானில் மருந்தின் மேம்படுத்தப்பட்ட மாதிரி ஒன்றை வெளியிட்டது. இந்த விழாவில் பாபா ராம்தேவ், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கொரோனில் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால், இந்த செய்திக்கு உலக சுகாதார அமைப்பு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்தது. கொரோனா சிகிச்சைக்கு எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் உலக சுகாதார அமைப்பு மதிப்பாய்வு செய்யவோ, ஒப்புதல் அளிக்கவோ இல்லை என்று ட்விட்டரில் விளக்கம் அளித்திருந்தது.

இந்தநிலையில், பதஞ்சலி மருந்து அறிமுக விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு இந்திய மருத்துவ சங்கம் சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பவர், இதுபோன்ற தவறான திட்டத்தை வெளியிடுவது எந்த வகையில் சரியான ஒரு அணுகுமுறை? இதுபோன்ற பொய்யான, அறிவியலுக்குப் பொருத்தமற்ற ஒரு மருந்தை வெளியிடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

சுகாதாரத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத இந்த மருந்தை உலக சுகாதார அமைப்பு நிராகரித்துள்ளது. இது நாட்டு மக்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய ஒரு அவமானம். கொரோனில் மருந்து கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் என்றால், பின் ரூ.35,000 கோடி செலவில் அரசு எதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்கிறது?'' என இந்திய மருத்துவ சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக விளக்கமளிக்கக் கோரி இந்திய மருத்துவக் கழகத்திற்கும் கடிதம் எழுதப்போவதாகவும் இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com